Tuesday 13 August 2013

சென்னை தினம்


நாம் வாழும் சென்னை நகரத்திற்கும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம்!
இந்த நாளை நகர மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என எண்ணிய சிலர் 2004 ஆம் ஆண்டு சிறிய அளவில் இந்தக் கொண்டாட்டத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர்.
சென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22 , 1639 என கருதப் படுகிறது.
தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறிய நிலப்பகுதி அன்று தான் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கை மாறியது. பிரான்சிஸ் டே, அவருடைய துபாஷி (இரு மொழி பேசுபவர்) மற்றும் அவர்களுடைய மேலதிகாரி அண்ட்ரூ கோகன்  விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர்.
பிறகு, கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அருகருகே இருந்த கிராமப் பகுதிகள் இணைக்கப் பட்டன. பழைய, புதிய சிறு நகரங்கள் இணைந்து சென்னை மாநகரமாக உருவாகியது.
இன்று சென்னை மாநகரம் கல்வி,மருத்துவம், ஆட்சித்துறை, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளில் சிறப்புப் பெற்ற நகரமாகத் திகழ்கிறது.
சென்னை தினம் இப்படிப் பட்ட ஒரு மாநகரத்தின் கொண்டாட்டம்.
இதைக் கொண்டாட வேண்டும் என முதன் முதலில் நகர வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டி சோஸா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சுசிலா ரவீந்திரநாத், ஆர். ரேவதி, வி. ஸ்ரீராம் ஆகியோரும் இணைந்து நகரத்தின் பல்வேறு பகுதி மக்களை ஊக்குவிக்க, சென்னை தினக் கொண்டாட்டம் சென்னை வாரமாக விரிவடைந்துள்ளது.
வரலாற்று நடைப் பயணங்கள், உரை நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், அஞ்சல் தலை,புகைப்படக் கண்காட்சிகள், எனப் பற்பல நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால்  ஒருங்கிணைத்து நடத்தப் படுகின்றன.
இந்த ஆண்டு சென்னை தினம் ஆகஸ்டு 19 முதல் 26, 2012 வரை கொண்டாடப் படுகிறது.