Saturday 24 August 2013

வென்றார் நடிகை குத்து ரம்யா!


 கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா, பெங்களூர் புறநகர் லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களான நடிகை குத்து ரம்யா, மற்றும் டி.கே. சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பெங்களூரு புறநகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மருமகளும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா குமாரசாமி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சுரேஷ் நிறுத்தப்பட்டார்.
மாண்டியா தொகுதியில் காங்‌கிரஸ் வேட்பாளராக திரைப்பட நடிகை குத்து ரம்யாவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் புட்டராஜூ போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது நடிகை ரம்யா மீது எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அத்துடன் அவரது வளர்ப்பு தந்தையும் திடீரென காலமானார். இதனால் கண்ணீருடனேயே அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த இரு தொகுதிகளிலும் கடந்த 21-ந் தேதி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முற்பகல் 11.45 மணியளவில் இரு தொகுதிகளும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பெங்களூர் புறநகர் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் வெற்றி பெற்றிருக்கிறார். மாண்டியா தொகுதியில் நடிகை ரம்யா 47,662 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பியாகிவிட்டார்.


No comments:

Post a Comment