Google+ Badge

Friday, 20 September 2013

பூவின் கனவு - சிறுகதை

னது குட்டிப்பாப்பா ரொம்ப நேரமாக அழுது கொண்டிருப்பதை பார்த்த கலையரசிக்கு எரிச்சலாக இருந்தது. என்னென்னமோ விளையாட்டு செய்து காட்டியும், கிலுகிலுப்பையை ஆட்டியும், தொட்டிலில் போட்டு ஆட்டியும், அழுகை நின்றபாடில்லை. அக்குழந்தைக்கு பசியா, தூக்கமா, வயிற்று வலியா அல்லது வேறு ஏதாவதா என்று புரியாமல் மருண்டு விழித்தாள். அழுகையே வந்து விட்டது அவளுக்கு. மறுபடியும் குட்டிப் பாப்பாவை தொட்டிலில் போட்டு சிறிது நேரம் ஆட்டினாள். தொட்டிலிலிருந்து வந்த அழுகை சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.
கலையரசி ஆறாவது படித்துக் கொண்டிருந்த போதுதான் அவளது அம்மா ஐந்தாவதாக குட்டிப்பாப்பாவைப் பெற்றெடுத்தாள். அந்த பிரசவ சமயத்தில்தான் வீட்டில் மற்ற தம்பிகள், தங்கையைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்ளவும் கலையரசி பள்ளியில் விடுப்பு எடுத்தாள். பின்னர் அதுவே நிரந்தரமாகி, பள்ளிக்குச் செல்வதை விட்டுவிடும்படியாகி விட்டது.
அவளது அப்பா சடையப்பன் மீன் வியாபாரம் செய்து வந்தான். அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்ப வண்டியை ஓட்டி வந்தான். அவனது மனைவி மயிலாத்தாள் சடையப்பனுக்கு உதவியாக மீன் கடையைப் பார்த்துக் கொண்டாள்.
அடுத்தடுத்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார்களே தவிர, அவர்களில் யாரையும் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் துளிகூட இல்லை. நன்றாகப் படித்துக் கொண்டிருந்த கலையரசியைக்கூட பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு, வீட்டில் மற்ற குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் “ஆயா”வாக ஆக்கி விட்டனர்.
ஆனால் கலையரசியின் சிந்தனை, எண்ணம் முழுவதும் எப்போதும் பள்ளியைச் சுற்றியே ஓடிக் கொண்டிருந்தது. புத்தகங்களை அவள் மிகவும் நேசித்தாள். வீட்டில் மிளகு, சீரகம் வாங்கி வரும் பொட்டலங்களைப் பிரித்த காகிதங்களைக்கூட விடமாட்டாள். உடனே பிரித்து படிக்க ஆரம்பித்து விடுவாள். படிப்பின் மீது அவளுக்கு அவ்வளவு ஆசை, ஆர்வம் இருந்தது. ஆனால் படிக்க வைக்கத்தான் ஆளில்லை. தனது வயதொத்த மற்ற பிள்ளைகளைப் போலப் பள்ளிக்கூடம் போக வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், நிறையப் பரிசுகள் வாங்க வேண்டும் என்று அவளது மனம் மீண்டும், மீண்டும் படிப்பையும், பள்ளியையுமே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
தீடீரென்று வாசல் பக்கம் கேட்ட அலறலையடுத்து சுயநினைவுக்குத் திரும்பியவள், வாசலில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த இரண்டு தம்பிகளையும் ஓடி வந்து விலக்கி விட்டு ரெண்டு போடு போட்டாள்.
நேற்று மீந்சு போன மீன்களை கருவாட்டிற்காக வெயியிலில் காய வைக்குமாறு அவளது அம்மா மயிலாத்தாள் சொன்னது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. உடனே அந்த மீன்களை உப்பு தடவி வெய்யிலில் காய வைத்தாள். இதற்குள் மீண்டும் தம்பிகளின் அலறல் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடி வந்து பார்த்தாள். அங்கே ஒரு தம்பி சாக்கடை கால்வாயில் விழுந்து அழுது கொண்டிருந்தான். அவனை வெளியே இழுத்து குளிப்பாட்டினாள். மற்றொருவன் சோப்பு நுரையை உடம்பு முழுவதும் பூசிக் கொண்டு கண்களைக் கசக்கியவாறு அழுதபடியே ஈர உடையுடன் வந்தான். இதற்கிடையே தங்கை தெரு மண்ணை வாய் நிறைய அள்ளித் தின்று கொண்டிருந்தாள். கலையரசிக்கு கோபமும் எரிச்சலுமாக வந்தது. அழுதே விட்டாள். பிறகு ஒருவாறு தன்னைத் தானே தேற்றியவாறு அவர்களை இழுத்து ஒழுங்கு படுத்தி குளிக்க வைத்து மதிய உணவு கொடுத்தாள். இதற்குள் நேரம் ஆகிவிட்டபடியால், பெற்றோருக்கு சாப்பாட்டை தூக்கில் எடுத்துக் கொண்டு குட்டிப்பாப்பாவை இடுப்பிலும், மற்ற தம்பிகள், தங்கையை இழுத்துக் கொண்டும் கடைக்குப் புறப்பட்டாள்.
      அவள் படித்த பள்ளியைக் கடந்து தான் மீன் கடைக்குச் செல்ல வேண்டும்.
பள்ளி அருகில் சென்றதும் ஏக்கத்துடன் பள்ளியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த தனது தோழிகளையும், நண்பர்களையும் பார்த்து சிரித்தாள். அவர்களும் பதிலுக்கு கையை ஆட்டினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது கலையரசிக்கு. மறுபடியும் அவர்களை வேடிக்கை பார்த்தவாறு நின்றிருந்தாள்.
அப்போது “சுளீரெ”ன்று முதுகில் ஓங்கி அடி விழுந்தது. திடுக்கிட்டு பதறிப் போய் திரும்பினாள். பின்னால் சடையப்பன் நின்றிருந்தான். “சனியனே… இன்னா பெறாக்கு பாத்துக்கினு நிக்கிற.. சோத்த எடுத்துட்டு சீக்கிரமா வரக்கடாது. அங்க ஒங்காத்தா…வயித்துப் புள்ளக்காரி பசியோட கெடக்கிறா.. அறிவில்லையா…”என்று வடைபாடிவிட்டு அவளிடமிருந்த சாப்பாடு தூக்கை மட்டும் பறித்துக் கொண்டான்.
அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பெரு மூச்சும், விம்மலும் அவளிடமிருந்து வெளிப்பட்டன.
அப்போதுதான் தெரிந்தது, தனது அம்மாவுக்கு இன்னொரு குழந்தை பிறக்கப் போகிறது என்று.
ஆற்றாமையும், கோபமும், ஆத்திரமுமாக வந்தது அவளுக்கு.
“ச்சே.. என்னது, இன்னொரு குழந்தையா..  இன்னும் எத்தனை குழந்தைகள்தான் பெத்துக்குவாங்களோ.. இப்ப இருக்கிறவங்களுக்கே சோறு போட முடியலை.. இந்த லட்சனத்தினே இன்னொரு குழந்தையா…. இவங்கள பாத்துக் கொள்வதிலேயே என்னோட வாழ்க்கை போயிடுமோ… இனிமே என்னால படிக்க முடியாதா… என்னோட படிப்பு அவ்வளவுதானா… இதுக்குத்தான் என்னையப் பெத்தாங்களை.. ஹூம்… இத இப்படியே விடக்கூடாது. இதுக்கு ஒரு முடிவு கட்டணும். நான் படிக்கணும்.. நானும் மத்தவங்க மாதிரி படிச்சு பெரிய ஆளா வரணும்” மனதுக்குள் நினைத்தவள் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவளது கண்களில் படிக்க வேண்டுமென்ற ஆர்வமும், மனதிடமுமம் வெளிப்பட்டது.
படிப்பின் மூது அவள் கொண்ட ஆர்வமும், உறுதியும் அவளுக்குள் ஒர் உந்து சக்தியை கொடுத்தது.
நடுநடுங்கும் உடலுடனும், அழுகையும் விம்மலுமாக தனது தந்தையை நோக்கி… ஏன் நயினா, அந்ச் சுவத்தில என்ன எழுதியிருக்குணு படிச்சயா…” என்று பள்ளிக்கூடத்துக்கு அருகில் எழுதியிருந்த சுவரைக் காட்டினாள்.
அந்தச் சுவற்றில் “குடும்பத்துக் கொரு குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம் எழுதியிருந்தது.   சடையப்பனை யாரோ சவுக்கால் அடித்தது போல சுரீரென்றிருந்தது.
தனது மகள் முன் நிற்கக்கூடத் தகுதியற்றவனாக கூனிக் குறுகி வெட்கித் தலை கவிழ்ந்தான்.
      அவளது கேள்வி, இதுவரை அவனுக்குள்ளிருந்த அறியாமை இருளைக் கிழித்தது. அவன்முன் கலையரசி விசுவரூபன் எடுத்து நிற்பதைப் போல உணர்ந்தான். அப்போதே ஏதோ முடிவுக்கு வந்தவனைப் போல அவளின் கையை பிடித்துக் கொண்டு வேகமாக கடைக்குச் சென்றான்.

கடையில் கலையரசியை உட்கார வைத்து விட்டு, “நாளையிலேருந்து நீ பள்ளிக்கூடம் போகலாம். இப்ப கடையைப் பார்த்துக்க… நானும், அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வர்றோம்” என்றவன், ஒரு முடிவோடு மயிலாத்தாளை அழைத்துக் கொண்டு மருத்துவமணை நோக்கி நடக்கலானான் சடையப்பன்..
அவர்கள் எதற்காக மருத்துவமனை செல்கின்றனர் என்பதைக்கூட அறியாதவளாக, பெருமை பொங்க தன் பெற்றோர் சடையப்பன்-மயிலாத்தாள் செல்லும் திசையையே விழியை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதை : சாய்சுசிலா
ஓவியம் :மாரீஸ், தமிழ்