Thursday 24 October 2013

ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா?


    கிராமம் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் ஏன் சில அரசியல் தலைவர்களாலும் கூறப்படும் / நம்பப்படும் செய்தி, அவர் எனக்கு ஏவல் வைத்து விட்டார். அதனால்தான் எனக்கு ஆட்சியில் பிரச்னை ஏற்படுகிறது; மோரில் இடு மருந்து வைத்துக் கொடுத்ததால்தான் அந்த அரசியல்வாதியின் உடல் செயலிழந்து விட்டது; என் எதிரி எனக்கு ஏவல் வைத்து விட்டதால்தான் என் மகன் பைத்தியமாகி விட்டான்; மகள் ஓடிப் போய் விட்டாள்; எதிரிகள் சூனியம் வைத்து விட்டார்கள், அதனால்தான் என் நண்பருக்கு தொழில் நஷ்டமாகி விட்டது. இது போன்ற பல செய்திகளை நாம் கேட்டிருக்க முடியும். நாளிதழ்களிலும் கூட அது பற்றிய செய்திகள், சில இதழ்களில் இந்த மர்ம, மாந்த்ரீகம் பற்றிய விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது. அது சரி, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதானா? இல்லை. மக்களை ஏமாற்றிப் பிழைக்க சிலர் செய்யும் ஏமாற்று வேலையா? அது பற்றிப் பார்ப்போம்.
சிலர், ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். அவர்களது கூற்று ஒருவிதத்தில் உண்மையும் கூட. ஆனால் அதற்காக ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று நாம் கூறி விட முடியாது.
     சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும். அந்த வகை மந்திரங்களுக்கு அபிசார மந்திரங்கள்என்று பெயர். இவை அதர்வண வேதத்தில் உள்ளன. தமிழிலும் பல ஓலைச்சுவடிகளில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளாவில் இருக்கும் மாந்த்ரீகர்கள் இவற்றில் தேர்ந்தவர்கள்.
இதுபற்றி, “அதர்வண வேதத்தின் இரண்டாம் பிரிவைச் சார்ந்த மந்திரங்கள் எண்ணிறந்தவை. இவை பெரும்பாலும் பேய் முதலியவற்றை விரட்டி ஓட்டுவன. சில சபிப்பன. சில காதலர்க்கிடையே ஊடல், பிணக்கு முதலியவற்றைத் தோற்றுவிப்பன. சில மனைவியைத் திரும்ப கணவனிடம் சேர்ப்பன. சில உறக்கத்தை உண்டு பண்ணுபவன. சில விருப்பமில்லாத ஆடவனிடத்து அல்லது பெண்ணிடத்துக் காதலைத் தோற்றுவிக்கும் வலிமை உடையன. ஒருவனது படத்தின் துணைக் கொண்டு அவனைத் தன்வயமாக்கவும், அவனுக்குத் தீங்கிழைக்கவும் வல்ல மந்திரங்கள் சில.  …………..  சில பாடல் பெண்ணைக் கருவுறச் செய்யாது தடுப்பதற்கும், ஆடவனை ஆண்மை குன்றியவனாக ஆக்குவதற்கும் ஆற்றல் படைத்தவை. இப்பாடல்கள் எல்லாம் அங்கிரஸர்களுடன் தொடர்புபட்டவை. இதுவரை கூறியவாறு சபிப்பன சில; கெடுப்பன சில; சத்துருக்களையும், மாந்திரீகர்களையும் அழிப்பன சில. இவற்றிற்கு அபிசாராணி என்று இன்னொரு பெயரும் உண்டு.என்கிறார் டாக்டர் கா. கைலாசநாதக் குருக்கள், தனது வடமொழி இலக்கிய வரலாறு என்னும் நூலில். (நர்மதா பப்ளிகேஷன்ஸ்)
    மந்திரங்கள் என்பவை ஒலி அதிர்வு உடையவை. அவை ஒரு மனிதனின் எண்ண ஆற்றல்களில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. தீய மந்திர உச்சாடனங்களால் தீய அதிர்வலைகள் ஏற்பட்டு அவை ஒரு மனிதனைக் குழப்பி தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். இதுதான் ஏவல் எனப்படுகிறது. ஏவல் என்றால் ஏவி விடுதல் என்பது பொருள்.
சூனியம் என்பதற்கு ஒன்றுமில்லாதது என்று பொருள். ஒரு மனிதனின் மனதைக் குழப்பி அவனை ஒன்றுமில்லாமல் ஆக்குவதே, அவனைச் செயல்பட முடியாதபடி முடக்குவதே சூனியம். பில்லி என்பதும் இந்த வகையைச் சேர்ந்ததே.
பொதுவாக மனச்சோர்வு உற்றவர்களும், தன்னம்பிக்கை குறைந்தவர்களும், கர்மவினைப் பாதிப்புகள் அதிகம் உள்ளவருமே இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். என்றாலும் சிலசமயங்களில் எதிரிகளின் பொறாமை, தீய வன்மம் போன்றவற்றின் காரணமாக, புனிதர்களும், மகான்களும் கூட இவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
சில சம்பவங்களைப் பார்ப்போம்.
     அரவிந்தர் ஆசிரமத்தில் ஒருநாள்புதுச்சேரி வந்த ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் பிற சாதகர்கள் தங்கியிருந்த இல்லத்திலேயே தங்கினார். அதை ஒரு முழுமையான ஆசிரமமாக்கும் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டார். உடன் தத்தா என்ற தோழியும் இருந்தார். இவர்களது வீட்டு வேலைகளைக் கவனிக்க ஓர் வேலையாள் இருந்தான். அவன் ஐரோப்பியப் பெண்கள் தானே என நினைத்து எதிலும் அலட்சியமாக நடந்து கொண்டான். தத்தாவிடம் அடிக்கடி மரியாதைக் குறைவாக நடக்கலானான். யாரையும் மதிக்கவில்லை. தொடர்ந்து பல தவறுகள் செய்து வந்தான். அவனால் அடிக்கடிப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. பல முறை கண்டித்தும் அவன் திருந்தாததால் அன்னையும் தத்தாவும் அவனை வேலையை விட்டு நீக்கினர்.
      ஸ்ரீ அன்னை
      பொறாமைக்காரனான அவன் ஒரு மந்திரவாதியை அணுகினான். ஸ்ரீ அன்னை மற்றும் தத்தாவைப் பழிவாங்குவதற்காக தீவினையை ஏவி விட்டான். அது முதல் அடிக்கடி அவர்கள் தங்கி இருந்த அந்த வீட்டில் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. இது பல நாட்கள் தொடர்ந்தது. யாராலும் காரணம் என்னவென்று அறிய இயலவில்லை. எது செய்தும் தடுக்க முடியவில்லை. சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.
      ஒரு நாள் தீவினையின் தொல்லை பொறுக்க முடியாமல் போகவே பொறுமை இழந்த அன்னை அதற்கான மூல காரணத்தைக் கண்டறிய விழைந்தார். தனித்தமர்ந்து ஆழ்நிலை தியானத்தில் மூழ்கினார். தியானத்தின் மூலம் நீக்கப்பட்ட வேலைக்காரன்தான் இவற்றிற்குக் காரணம் என்பது தெரியவந்தது. அவனுக்கு இணைப்புச் சக்தியாக அந்த வீட்டிலுள்ள ஓர் வேலைக்காரச் சிறுவன் இருக்கிறான் என்பதையும் ஸ்ரீ அன்னை கண்டறிந்தார். உடனடியாக அந்தச் சிறுவனை வேறு இடத்திற்கு மாற்றினார். அதுமுதல் அந்தத் தீவினை தொடர முடியாமல் செயலிழந்தது.
       ஸ்ரீ அரவிந்தர்

             ஆனால் அது ஏவிய அந்த வேலைக்காரனைச் சென்று பாதித்தது. அவன் கை, கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானான். அதனால் மிகவும் மனம் கலங்கிய அவன் மனைவி ஸ்ரீ அன்னையையும் ஸ்ரீ அரவிந்தரையும் சந்தித்து, அவனது தீச்செயலை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டாள். ஸ்ரீ அரவிந்தரும், ”அவன் ஏதோ ஆத்த்திரத்தில் அறியாமல் செய்து விட்டான். அவனை மன்னிப்போம்என்றார், ஸ்ரீ அன்னையிடம். அன்னையும் அவனை மன்னித்தார். அதுமுதல் அத்துன்பம் நீங்கி உடல், மனத் தெளிவு பெற்றான் அந்த வேலைக்காரன்ன். ஸ்ரீ அரவிந்தரின் பக்தராகவும் மாறிப் போனான்.
      மேற்கண்ட சம்பவம் மூலம் நமக்குத் தெரிவது என்ன? ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் பொய்யல்ல என்பதும், சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும் என்பதும் தெரிய வருகிறதல்லவா?
 Every Action has an Equal and Opposite Reaction என்றார் நியூட்டன். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஒருவருக்கு நாம் தீமை செய்தால் அந்தத் தீவினை நம்மையும் வந்து பாதிக்கும். இதற்கு மேற்கண்ட சம்பவம் சரியான உதாரணம். இதைத் தான் வள்ளுவரும்,
 ” மறந்தும் பிறன் கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாம்பன் சுவாமிகள்
             பாம்பன் சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பத்தைப் பார்ப்போம்.  சுவாமிகள் சிதம்பரத்தில் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால், சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வென்றார். அதனால் வன்மம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளின் மீது தீவினையை ஏவி விட்டனர். முருகன் அருளால், அந்தத் தீவினை, ஏவி விட்டவனையே சென்று தாக்குமாறுச் செய்தார் சுவாமிகள்.

இதனை,
“……………. தில்லை பின்னை வாழ்
குடில நாமர்கள் கொடிய சூனியம்
ஊட்டி னார் கொலற் கேயஃதுங் கெடுத்
துவகை செற்றுலா மவர்வ ழக்கெலாம்
ஒட்டி யேயெனக் கீந்த வென்றியிவ்
வுலகு கூறுமே யலகில் வேன்முதால்.
          -என்ற அவருடைய குமாரசுவாமியம்பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும், “பில்லி சூனியம் பெரும்பகை அகல…” என்று வரும் வரிகளும் இது போன்ற தீச்செயல்கள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் தனது சண்முக கவசத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.
                       ஸ்ரீ சங்கரர்
          சங்கரர், ராமானுஜர் இருவருமே இந்தத் தீய அபிசார மந்திரங்களால் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர்களது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரரிடம் வாதில் தோற்ற அபிநவ குப்தன், அவர் மீது தீவினையை ஏவி விட்டான். அதனால் பலத்த பாதிப்புக்குள்ளானார் ஸ்ரீ சங்கரர். பின்னர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி,  ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். அது போல சமணர்கள் செய்த துன் மந்திரவாதத்தால் பல சைவர்கள் பாதிக்கப்பட்டதையும் நாம் பெரிய புராணம் வழியாக அறியலாம். அவர்களை தனது இறையாற்றல் மூலம் வென்றார் ஞான சம்பந்தர் என்பதையும் நாம் அறிய முடிகிறது.

   ஆக, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதான் என்பதை இவற்றின் மூலம் உணர முடிகிறது. அதே சமயம் ஏவல் வைக்கிறேன், எடுக்கிறேன் என்றெல்லாம் கூறி ஆன்மீகத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் சாமியார்களிடமிருந்தும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.



No comments:

Post a Comment