Saturday 3 May 2014

ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கும் சிறிய வாசல் கொண்ட சிவன் கோயில்!!!



 விழுப்புரம் அருகே உள்ள ஒரு கோடி கிராமத்தில் ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கும் அளவுக்கு உலகிலேயே மிகச் சிறிய வாசல் கொண்ட சிவன் கோயில் உள்ளது.
விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் தோகைப்பாடியில் இருந்து பிரிந்து 5 கி.மீ. சென்றால் வரும் ஒரு அழகிய கிராமம் ஒரு கோடி. இங்கு மொத்தம் 230 வீடுகள் மட்டுமே உள்ளன. ஆயிரத்துக்கும் குறைவான மக்களை கொண்டது இக் கிராமம். நெல் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது.
இங்குள்ள பழமை வாய்ந்த சிவாலயத்துக்கு ஒரு கோடி சித்தர்கள்வரை வந்து வழிபட்டு, தவம் செய்துச் சென்றுள்ளனராம். அதனால்தான் இக் கிராமம் "ஒரு கோடி' என்று அழைக்கப்படுவதாக அதன் ஊராட்சித் தலைவர் அய்யனார் கூறினார்.
தற்போது அந்த சிவாலயம் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சிவாலயத்தில் பழைமை வாய்ந்த சிற்பங்கள் உள்ளன. கோயிலுக்கு முன்புறம் எல்லைபிடாரி அம்மன் சிலை உள்ளது. கோடிவிநாயகர் என்று அழைக்கப்படும் விநாயகர், குருபகவான், கொற்றவை ஆகிய சிலைகளும் உள்ளன.
இங்குள்ள பல சிலைகள் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு பின்பு கோயில் அருகே நிறுவப்பட்டுள்ளதாகவும் கோயிலின் உள்ளே பல்வேறு அரிய வகை ஓலைச் சுவடிகள் இருந்ததாகவும், நாளடைவில் அவை காணாமல் போயும், பலரால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன என்றும் இக் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இக் கோயில் மூலவர் ஸ்ரீமுக்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர். ஆனால் இக் கோயில் மூலவரை "ஸ்ரீ ஓலை படித்த நாயகி உடனுறை கோடி கொடுத்த நாதர்' என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இதனால் இங்கு ஓலைச் சுவடிகள் இருந்தது என்ற மக்களின் கூற்று உண்மையாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
கோயிலில் நுழைவதற்கு பக்கவாட்டில் வாயில் இருந்தாலும் மூலவருக்கு நேரே ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கக் கூடிய மிகச்சிறிய வாசல் உள்ளது. இதுதான் கோயில் வாசல் என்றும் உலகிலேயே மிகச் சிறிய வாசல் உள்ள கோயில் இது என்றும் மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவனிடம் கேட்டபோது, இக் கோயிலில் உள்ள சிலைகள் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆனால் இக் கோயில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இக் கோயிலில் கொற்றவை, பேச்சியம்மன், மூத்ததேவி ஆகிய சிலைகள் சிற்பங்கள் போல் உள்ளன.

இக் கிராமத்துக்கு ஒரு கோடி என்று பெயர் வந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஒரு கோடி என்ற எண் அந்த காலத்தில் பயன்பாட்டில் இல்லை. அதனால் எண்ணிக்கையை வைத்து இந்த பெயர் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றார்.
தங்கத்தேருடன், புதையல்!
சிவாலயம் அருகில் கிணறு உள்ளது. இந்த கிணற்றின் உள்ளே தங்கத் தேருடன் கூடிய புதையல் இருந்ததாகவும், கல்களை கிணற்றுக்குள் வீசினால் உலோகத்தின் மேல் விழுவதுபோல் வினோத சத்தம் வந்ததாகவும், தற்போது எந்த சத்தமும் அந்த கிணற்றில் வரவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். புதையல் எடுக்கப்பட்டுவிட்டதா, அல்லது மண் மேவிவிட்டதா என்று தெரியவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

1 comment:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

    2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.

    தற்போது பதிவை இணைக்கலாம்.

    தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete