Google+ Badge

Tuesday, 6 May 2014

114 வயது மகானிடம் ஆசி - ஒரு ஆன்மிக அனுபவம்!வாழ்க்கை விசித்திரமானது, சுவாரஸ்யமானது, ஆனந்தமானது, துன்பமானது…. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு விதம். திட்டமிட்ட நிகழ்வுகள் சில நேரங்களில் நடக்காமல் போகலாம். எதேச்சையாக சில ஆச்சரிய நிகழ்வுகள் நடைபெறலாம். வாழ்வின் சூட்சுமமே அதுதான். இது இப்படித்தான் இருக்கும் என்று எவரும் எதையும் அறுதியிட்டு கூறிவிட முடியாது. அது தான் வாழ்க்கையின் ரகசியம். 
சிவஸ்ரீ எத்திராஜூலு சுவாமிகள்
    அப்படி ஒரு எதேச்சையான ஒரு சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை எனது வாழ்வில் நிகழ்ந்தது. அது ஒரு அற்புதமான நேரம். அந்த நிமிடங்கள் மெய்யானது. நான் குடும்பத்துடன் ஒவ்வொரு ஞாயிறும் ஏதாவது கோவில், குளம் என சுற்றுவது வாடிக்கை. அப்படி கடந்த வாரம் சென்னை மாங்காடு அருகே உள்ள ஸ்ரீசர்ப சித்தர் ஜீவ சமாதிக்கு சென்றிருந்தோம். நாங்கள் சென்றிருந்த போதுதான் எதிர்பார்க்காத அந்த சந்திப்பு நிகழ்ந்தது. ஆம். நூற்றிப் பதினான்கு வயது பழுத்த சிவப்பழமான  சித்தரடிகளான மகான் சிவஸ்ரீ எத்திராஜூலு சுவாமிகள் அங்கு வந்தார். சர்ப சித்தரை வணங்கி வழிபட்டார். இந்த 114 வயதிலும் சுறுசுறுப்பும், பேச்சும், பார்வைக் கூர்மையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. மேனியெல்லாம் திருநீறு அணிந்து முன் நெற்றிக்கு மேலே உச்சியில் சிறு குடும்பி வைத்து, ஒற்றை ஆடை அணிந்து, எலும்பில் போர்த்திய தோல் போன்ற மிக மெலிந்த தேகத்துடன், வெறுங்கால்களில் நடந்து வந்தார். கண்களிலும், முகத்திலும் ஆன்ம ஒளி குடிகொண்டிருந்ததை நேரில் தரிசித்தவர்கள் உணருவார்கள். அந்த மகானிடம் குடும்பத்துடன் ஆசி பெற்றோம். தலைமீது கை வைத்து ஆசி வழங்கினார். அந்த நிமிடங்கள் தன்னை மறந்து, எண்ணங்களற்று, வெறுமையாய் உணர முடிந்தது. அந்த உணர்வு நீண்ட நேரம் மனதில் தங்கியிருந்தது. அது ஒரு அற்புத அனுபவம். ஆனால் அவருடனான சந்திப்பை பதிவு செய்ய ஒரு புகைப்படம் எடுக்கக் கூட தோன்ற வில்லை. இத்தனைக்கும் கையில் விடியோ கேமரா, செல்போன் எல்லாம் இருந்தது. அவர் சென்ற பிறகுதான் புகைப்படம் எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. (அவர் கொடுத்த அழைப்பிதழில் இருந்த அவரது படத்தை இங்கே பதிவு செய்துள்ளேன்)
      இவரைப்பற்றி ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருந்தாலும், அவரை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவர் தங்கியிருப்பது தக்கோலத்தில். பூந்தமல்லிக்கு அவர் வந்திருந்த போது அவரை சந்தித்து தரிசிக்க நினைத்தேன். ஆனால் அன்றைய சூழ்நிலை காரணமாக போக முடியவில்லை. ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவரைச் சந்தித்து ஆசி பெறுவேன் என்று நினைக்கவேயில்லை. எல்லாம் சிவ சித்தம்.
கோமளநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்
 சித்த வைத்தியத்திலும் அவர் தேர்ந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சிவ நெறியில் அவர் கொண்டுள்ள அதீத ஈடுபாட்டின் காரணமாக வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே திருவூறல் என்று அழைக்கப்படுகின்ற தக்கோலத்தில் குசஸ்தலை ஆற்றின் வட பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு பயிற்சி மையம் அருகில் அருள்மிகு கோமளநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயத்தை  எத்திராஜூலு சுவாமிகள் அமைத்துள்ளார். பௌர்ணமி தோறும் இந்த ஆலயத்தில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. தற்போது அந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் திருப்பணி நடைபெற்று வருகிறது.  எவ்வித தங்கு தடையுமின்றி அந்த திருப்பணி சிறப்பாக நடைபெற, மாங்காடு சர்ப சித்தர் ஜீவ பீடத்தில் வழிபாடு செய்ய வந்திருப்பதாக அறிந்தேன். அந்த ஆலயத் திருப்பணிக்கு எங்களால் இயன்ற ஒத்துழைப்பும், உதவியும் செய்வதாக முடிவு செய்துள்ளோம். எனது வாழ்வில் 114 வயதுடைய ஒரு மகானை சந்தித்து ஆசி பெறுவது இதுதான் முதல் முறை. குருவருளும், திருவருளும் இதை சாத்தியமாக்கியுள்ளது என்றே நினைக்கிறேன்.