Wednesday 22 January 2014

த்ரிசக்கர தரிசனம்!

           க்தி - சக்தி - சக்தி என்று சொல்லு - வரும் சங்கடங்கள் யாவையும் கொல்லு என்று பாடினார் பாரதியார்.
அந்த பராசக்தியின் மகிமையை மூன்று முறை சொன்னதால் தானோ என்னவோ அந்த மகிமை வாய்ந்த சக்தி சில இடங்களில் முப்பெரும் தேவியராகக் கோயில் கொண்டிருக்கின்றனர். 
தருமமிகு சென்னை என்று திருவட்பிரகாச வள்ளலாரால் புகழப்பட்ட சென்னை நகரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் தென்சென்னையில் மூன்று சக்தியர்கள் மிக வித்தியாசமான முறையில் கோயில் கொண்டுள்ளனர். இந்த சக்திகளை ஒரே நாளில் சென்று தரிசிப்பதற்கு மூன்று தேவியர் தரிசனம் என்னும் த்ரிசக்கர தரிசனம் என்று பெயர்.

அம்பிகையை வழிபடவே பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று ஆதிசங்கரர் தனது சௌந்தரிய லகரியில் ''ப்ரணந்தும் ஸ்தோதும் வாகத மக்குதபுண்ய: ப்ரபவதி'' என்ற ஸ்துதியின் மூலம் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு அம்மனை வழிபட்டாலே பல நலன்கள் நமக்கு வந்து சேருகிறது. விஷேசமான இந்த மூன்று தேவியரையும் வழிபடுவதால் நம் வாழ்வில் வெற்றிகளும் வந்து சேரும் என்பதில் ஐயமுண்டோ...


முச்சக்தி வேட்டல் மகிமை:- தொண்டை மண்டலம் எனப்படுகின்ற இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிப் பகுதியில் பன்னிரு கி.மீ. தொலைவுக்குள்ளே தான் மூன்று சக்திகளின் அருளாட்சி செய்யும் திருத்தலங்கள் இருக்கின்றன. இவை ஒரே நேர்க்கோட்டில் அமைய பெற்று பக்தர்களின் வழிபாட்டு முறையில் சற்று வித்யாசத்துடன் விளங்குகின்றன. பன்னிரு ராசிக்காரர்களும் அவரவர் பிரார்த்தனைகளுக்கு ஏற்ப மூன்று அம்மன்களையும் ஒரே நாளில் வழிபட்டுப் பலன் பெறலாம்.
திருவேற்காடு, மாங்காடு, திருமுறைக்காடு (தென்குன்றத்தூர்) என்ற வரிசையில் அமைந்துள்ள சக்திகளின் அவதாரச் சிறப்புகளைக் கண்டும் கேட்டும் அதிசயிப்போர் பலர். இச்சக்தியர்களின் அருட்கோலம்பற்றி அகத்தியர் நாடியின் -யுக கேந்திர பரிகார காண்டத்தில் அகத்தியர் -ருத்ர சம்வாத சருக்கத்தில் உள்ளதாகக்குறிப்பிடப்பட்டு, இத்தனை வருஷாதிகள், கல்பாதிகள் பலன் தரும் என்று செய்திகள் உள்ளன. 

சக்தியின் மகிகை கூறும் நூல்களில் ரேணுகா தேவியின் திருக்கதையில் ஸ்ரீகருமாரி அம்மன் மகிமைகளையும், ஸ்ரீசண்டிகா பூஜையில் காமாட்சி அம்மன், சக்தியையும், கௌரி மகாத்மியப் பகுதியில் ஸ்ரீசாத்யாயனி தேவியின் புகழையும் படித்திருக்கிறோம். அவர்கள் ஒரே வரிசையில் அருள் தரும் திருக்கோலங்களை காணுங்கள்.
திருவேற்காடு காக்கும் கருமாரி: வேம்பின் மூலம் வினை தீர்த்து வரும் அம்பிகை கருமாரி தேவி அமர்ந்த சக்தியாகக் கோவில் கொண்டிருக்கிறாள். இத்தலத்திற்கு மேற்கே, ஸ்ரீவேற்காட்டீஸ்வரர் சன்னதியில் தான் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்து அனைத்து பக்தர்களுக்கும் குருவருள் தருகிறார். சக்தியையும் இத்தலத்தின் குரு நாதரையும், வேற்காட்டீஸ்வரரையும் வழிபட்டு வரவேண்டும். புற்று மண் பிரசாதமே இங்கு சக்தி வாய்ந்தது.

மாங்காடு காமாட்சி அம்மன்: கருணை வழியில் காணும் காமாட்சி தேவியாய் திருவேற்காட்டி-ருந்து தென்பாகமாக 6 கிமீ தொலைவில் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். ஆதி சங்கரர் ஸ்ரீசக்கர மகாமேரூவை இத்தலத்தில் பிரதிட்டை செய்ததால் கண்களில் ஈர்க்கும் ஒளி படைத்தவளாய் அருள் வழங்குகிறாள். இத்தலத்தில் ஆதிசங்கரர் குருவருள் தருகிறார். எலுமிச்சங்கனியே இந்த சன்னதியில் அருட்பிரசாதம்.


திருமுறைக்காடு காத்யாயினி: மாங்காடு தலத்தி-ருந்து 6 கிமீ தொலையில் உள்ளதுதான் கல்யான காத்யாயனி அம்மன் திருத்தலம்.

அமர்ந்த கோலத்தில் கிழக்கு முகம் நோக்கியவாறு தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்குத் திருமணப் பேற்றையும், குழந்தைப் பேற்றையும் அருள்கிறாள். பெரியபுராணம் என்னும் திருமுறை ஆசிரியர்களின் திருஅவதார வரலாற்றைப் படைத்த தெய்வச் சேக்கிழார் பெருமானின் இல்லம் அருகே அமைந்ததால் திருமுறைக்காடு என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமானே குருநாதராக விளங்கி அனைவருக்கும் குருவருள் தருகிறார்.


எனவே, காக்கும் கருமாரி, கருணைக் காமாட்சி, கல்யாண காத்யாயணி ஆகிய மூன்று சக்தி தேவியரையும் ஒரே நேர்க்கோட்டில் நாம் விரும்பும் பலன்களுக்கு ஏற்ப இவ்விரு கிழமைகளிலும்தரிசித்து சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழலாம்.


தரிசன சிறப்பு பலன்கள்: மூன்று சக்தி தேவியர்களையும் தரிசிக்கக் செய்வோர் பொதுவாக அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும் விரும்புகிற பலன்களுக்கு ஏற்ப, குறிப்பிட்ட கிழமைகளிலும் சக்தியின் தரிசன விதியின் படி சென்று வரலாம்.


செயல் தடைகள் விலக பௌர்ணமி: பில்லி சூனியங்கள் விலகி நலமடைய - அமாவாசை தினம். முயற்சிகள் வெற்றி பெற - ஞாயிறு. அலுவலகத்தில் பணியிடம் பிரச்சனை தீர்த்திட - திங்கள். கடன் தொல்லை தீர்ந்து சொந்த வீடு அமைந்திட - செவ்வாய். பூமி வழக்குகள் தீர்ந்திட, விரும்பியவரை அடைய - புதன். கல்வியில் சிறக்க, குழந்தை பேறு கிடைக்க - வியாழக்கிழமை. பொன், பொருள் சேர்த்து திருமகள் அருள் பெற்றிட - வெள்ளி. நவக்கிரக தோஷங்கள் விலகி கணவன்-மனைவி விரிசல் தீர்ந்திடவும், வெளிநாட்டு பயணம் வெற்றியடையவும் - சனிக்கிழமையும் மூன்று தேவியரையும் தரிசனம் செயதல் வேண்டும்.


உங்கள் வாழ்வில் சகல மங்களங்களும் பெற திருவேற்காட்டில் அமர்ந்து மாங்காட்டில் நின்று திருமுறைக்காடென்னும் தென்குன்றத்தூரில் வீற்றிருந்து அருளும் மூன்று தேவியர்களும் தரிசனம் செய்யுங்கள் என்கிறார் காத்யாயனி அம்மன் கோவில் குருக்கள் குமாரசிவாச்சாரியார்.


வழித்தடம் : சென்னை பல்லாவரத்தில் இருந்து 7 கிலோ மீட்டரில் உள்ளது குன்றதூர். குன்றதூர் முருகன் கோவிலில் இருந்து திருநீர்மலைக்கு பிரியும் சாலையில் உள்ளது காத்யாயனி அம்மன் கோவில். குன்றத்தூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் உள்ள மாங்காடு. மாங்காட்டில் இருந்து 4 கி.மீ. தொலையில் உள்ளது திருவேற்காடு. 



No comments:

Post a Comment