Thursday 16 April 2015

அநாதைச் சிவன்!





      ஒரு அந்தி சாயும் நேரம். நண்பர் கார்த்திக்குடன் காஞ்சிபுரம் சென்று விட்டு திரும்பும் போது, அந்தக் கோவில் பற்றி அவர் சொல்ல, இருவரும் அங்கு சென்றோம். அந்தக் காட்சியைக் கண்டவர்களுக்கு கண்ணில் ரத்தம்தான் வரும். ஆம். சுமார் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் எனக் கூறுகின்றனர். 
        ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு  அருகே உள்ள பென்னலூர் என்ற சிறு கிராமத்தில் ஒதுக்குப் புறமாக, உலகுக்கே படியளக்கும் சிவன் அநாதை போல, கேட்க நாதியற்றவனாய் ஏகாந்தமாய் யாருமற்று கிடக்கிறான். மிகப் பிரம்மாண்டமாக அந்தக் கோவில் இருந்திருக்க வேண்டும் என்பதை அங்கு சிதைந்து கிடக்கும் கட்டட அமைப்பு மூலம் தெரிகிறது. ஏராளமான கல்வெட்டுகள் சிதைந்து கிடக்கின்றன. ஏராளமான சிற்பங்கள் அங்ககீனமாய் சிதிலமடைந்து கிடக்கின்றன. கருவறை வெளிப்புற அமைப்பில் 108 பூதகனங்கள் வெவ்வேறு விதமான தோற்றத்தில் ஆனால் அச்சில் வார்த்ததைப் போல.... அடடா... அந்தச் சிற்பிகள் கடவுளுக்கு நிகரானவர்கள். கோவில் உள்புறம், வெளிப்புறம் எல்லாப் பகுதிகளிலும் ஒரு சிற்பத் தொகுதியே அங்கிருந்திருக்க வேண்டும் என்பதைப் போல சிதைந்த நிலையில் காணப்படுகிறது. 







        மூலவருக்கு நேர் எதிரே உள்ள நந்தி சிலையும் வித்தியாசமாக இருக்கிறது. சற்றே கழுத்தை திருப்பியவாறு அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நந்தியின் முகம் சிதைக்கப்பட்டு காணப்படுகிறது. சிவன் சந்நிதியைச் சுற்றிலும் மேலும் பல சந்நிதிகள் இடிந்த நிலையில் பாழடைந்து கிடக்கிறது. ஏராளமான கல்வெட்டுகள் ஆங்காங்கே சிதைந்து கிடக்கின்றன. கோவிலுக்கு அருகே மிகப் பெரிய அளவிலான இரு குளங்களும் காணப்படுகின்றன. முன்பு புதர் மண்டி, கோவில் இருந்த சுவடே தெரியாமல் இருந்துள்ளது. சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து புதரை அகற்றி சுத்தப்படுத்தி வைத்துள்ளார். விஷேச நாட்களில் பூஜைக்கு ஏற்படாடு செய்திருப்பார்கள் எனத் தெரிகிறது. மற்றபடி, ஆள் அரவமற்ற மயான அமைதியுடன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நடப்பவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது போல சிவன் அங்கு மௌனமாக அமர்ந்திருக்கிறார். ஒரு நோஞ்சான் நாய் மட்டும் கருவறைக்குள் அடைக்கலம் புகுந்தது போல படுத்துக் கிடந்தது. நாம் சென்ற போது ஏறெடுத்து பார்த்ததுடன் சரி. மறுபடியும் அது கவிழ்ந்து படுத்துக் கொண்டது. 















      வவ்வால்களும், கவுளிப் பல்லிகளும், புறாக்களும் மட்டுமே அங்கே நித்திய வாசம் செய்து வருவதைக் காண முடிந்தது. மாற்று மதங்களைச் சார்ந்த சில போக்கிரிப் பொறுக்கிகள் அங்கிருக்கும் உடைந்த சிலைகளை தூக்கிப் போட்டு மேலும் உடைத்துச் சிதைப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர். இந்த மக்களின் அலட்சியம், அற்புதமான ஒரு சிற்பக் குவியலை மட்டும் புறக்கணிக்கவில்லை, இறைவனையும் சேர்த்துத்தான். 



      எது எதற்கோ கொடி பிடித்து கோஷமிட்டு விளம்பரத்துக்காக போராட்டம் நடத்தும் புண்ணியவான்கள் இது போன்று சிதைந்து கிடக்கும் அற்புதங்களை, இந்த நாட்டின் கலையை, பண்பாட்டினை, கலாசாரத்தை, பொக்கிஷங்களை காப்பாற்ற ஏதாவது செய்வார்களா..?
    நேரில் போய் பாருங்கள்... இதற்குமேல் சொல்லத் தெரியவில்லை... 

   - சுசிலா மாரீஸ்வரன்.
படங்கள் உதவி கார்த்திக்.

No comments:

Post a Comment