Wednesday 23 July 2014

மாமிசம் விரும்பிச் சாப்பிட்ட இராமன்!!!


டி. பரமேசுவர அய்யர் எனும் ஆய்வாளர் ``ராமாயணமும் லங்கையும் என்றொரு ஆங்கில நூலை 1940 -இல் எழுதியுள்ளார். பெங்களூரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட அந்நூலில், ராமனின் ``கல்யாண குணங்களைப்பற்றி சவிஸ்தாரமாகவே வெளுத்துக் கட்டியிருக்கிறார்.


``ராமன் தெய்வீகமானவன் என்ற கருத்து வால்மீகியின் கண்களுக்குத் திரையிடவில்லை, அவனுடைய மானுடத் தன்மையை மறைக்கவில்லை. வில் வித்தையை ராமன் மிகவும் விரும்பினான். வேறெவரையும் விடச் சிறந்த வில்லாளியாக விளங்கினான். அவன் மனம், அவன் தசைத் திரட்சிமிக்க உடல்கட்டு எல்லாமே இறைச்சிக்காக வேட்டியாடியதால் அமைந்தவையே! வில் வித்தை, வேட்டையில் வேட்கை. மாமிசம் தேவை என்பதற்காகச் செய்த வேட்டைகள், சீதையின் மேல் காதல் இவைய னைத்தும் அவனது எலும்புகளில் ஊறித் திளைத்திருந்தன (பக்கம் 129).


``கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டிய போது திரும்பி, அயோத்தியிருக்கும் திசை நோக்கி ராமன்தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்பொழுது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டை ஆடப் போகிறேன்? இந்த வேட்டை ராஜரிஷிகள் சம்மதித்த தல்லவா? (அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27) இறைச்சி உண்பதற்கான ஆசையின் அடிப்படையில்தான் வேட்டையை விரும்பினான் ராமன்.

``விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான் - காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன். தேன், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றை மட்டும் புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்று கூறுகிறான் (அயோத்யா காண்டம், சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29), (நூலின் பக்கம் 130).

குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது ராமனின் தர்மபத்தினி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் (ஒயின்) மதுவும், இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம், சர்க்கம் 52, பாடல் 89)

காட்டிற்குள்நுழைந்த அன்று, ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் இரவுப் பட்டினி. விடிந்ததும் விடியாததுமாக ராமனும், லட்சுமணனும் வில், அம்பை எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப் பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், , ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்று, கொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டனர். (அயோத்யா காண்டம், சர்க்கம் 52, பாடல் 102) சீதையும் சேர்ந்துதான் சாப்பிட்டாள். சுவையான இறைச்சியை அவளுக்குத் தந்து அவளை ராமன் திருப்திப்படுத்தினான் (அயோத்யா காண்டம், சர்க்கம் 96, பாடல் 1).


அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்! நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம். ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம். கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள், ராமனுக்கு ரொம்ப ஆசையான உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).


இத்துடன் முடியவில்லை. ``இறைச்சிப் படலம்! விருந்தினர்களுக்கு, அவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும், இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள். தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான். அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள், என் கணவர் விரைவில் வந்து விடுவார். காட்டுப் பொருள்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி கொண்டு வருவார்; இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்கு) காட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம், சர்க்கம் 47, பாடல்கள் 22,23).

யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்) மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம், சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141). இராமன் கறி தின்றதை, ஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார் வால்மீகி எனும்போது (வால்மீகியும் வேடர்தான், இறைச்சிப் பிரியர்தான்) ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் என்பது வலியுறுத்தப் படுகிறது. இந்த லட்சணத்தில் `ராமன எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள், இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால், இவர்களை என்ன பெயரிட்டழைப்பது?

-------"சார்வாகன்" அவர்கள் 20-12-2007 "விடுதலை" இதழில் எழுதியது.

1 comment:

  1. Two points: (1)These were not highlighted by Upanyasakas; in fact, did not touch them. But, it was perhaps never said that he was a vegetarian. He was born as a Kshatriya; eating meat was rather normal (2) Have read : Brahmins in Ramayana and Mahabharat days, were perhaps, eating meat too. Only after they encounter the Saivas of the South India, they stopped eating meat. In any way, who told eating meat is bad?

    ReplyDelete