Wednesday, 14 August 2013

கொண்டாடுவோம்…



பல்சான்றீரே... பல்சான்றீரே
பாரத நிலை கண்டு
பரவசம் கொள்வோம்

கொடியேற்றி இனிப்பு வழங்கி
கொண்டாடுவோம் மக்களை
கோமாளிகளாக்குவோம்

வேதனைகளை சாதனையாக்கும்
வித்தை கற்போம்

அறியாமை இருளில்
அடைந்து கிடப்பதில்
ஆனந்தம் கொள்வோம்

அந்நியச் சுரண்டலை
அப்புறப் படுத்திய நாம்
சொந்தச் சுரண்டல் கண்டு
சும்மா கிடப்போம்

வறுமையில் வாடுபவனை
மேலும் வருத்தப்பட்டு
பாரம் சுமக்க வைப்போம்

நாளும் இங்கு
நாற்பது கோடி பேர்
பட்டினி கிடப்பினும்
அணுகுண்டு செய்வதில்
ஆர்வம் காட்டுவோம்
 
மனித நேயத்தை கழுவி விட்டு
மதவேஷம் பூசிக் கொள்வோம்
மொழிக்காகவும் இனத்துக்காகவும்
மோதிக் கொள்வோம்

சாதிக்காக
சண்டையிடுவோம்
 
தண்ணீருக்காக
தகராறு செய்வோம்
சத்தியங்களைப் புதைத்து விட்டு
பம்மாத்துகளுக்கு
பாத பூஜை செய்வோம்

பேதங்கள் தாங்கிய
ஜனநாயகச் சட்டங்களை
வேதங்களென்று வணங்குவோம்

வாழ வழி கேட்போருக்கு
கல்லறைப் பக்கம் கை காட்டுவோம்

செங்குருதி தியாகங்களை
சில்லறைகளாக மாற்றுவோம்

எது பற்றியும் கவலையின்றி
போதைக் கனவுகளில்
பூரித்துக் கிடப்போம்

அப்போதும் இப்போதும்
அதிக வேறுபாடில்லை
எப்போதும் நாம்
வெயிலையும் குளிரையும்
போர்த்தி அலைவோம்

ஆனாலும் நாமெல்லாம்
வேற்றுமையில் ஒற்றுமையாய்

வேதனைகளைச்
சாதனைகளாய்.....

பாரத நிலை கண்டு
பரவசம் கொள்வோம்.


-    சாய்சுசிலா மாரீஸ்.
-    படங்கள் : கூகுள் 

No comments:

Post a Comment