அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
நோன்பு பெருநாள் என்றால் என்ன?
ஓர் உண்மையைச் சொன்னால் உங்கள் விழிப் புருவங்கள் வில்லாய் வளையும்...!இஸ்லாமியர்களுக்கான இனிய பண்டிகைகள்-இனிய திருவிழாக் கள் மொத்தம் எத்தனை தெரியுமா?இரண்டே இரண்டுதான்.வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை! ஒன்று, ரம்ஜான் பண்டிகை என்று சொல்லப்படும் ஈகைத் திருநாள். இன்னொன்று, ஹஜ்ஜுப் பெருநாள் என்று சொல்லப்படும் தியாகத் திருநாள்.இந்த இரண்டைத் தவிர, வேறு எந்த ஒரு பண்டிகையோ, திருவிழாவோ இஸ்லாமியர்களுக்கு இல்லை.
அப்படியானால் முஹர்ரம், பஞ்சா, உரூஸ். சந்தனக்கூடு என்பதெல்லாம்...?
அவையெல்லாம் பண்டிகையும் அல்ல; திருவிழாவும் அல்ல. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்கள் அவை.அவ்வளவு ஏன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாது நபி கூட, இஸ்லாமியப் பண்டிகை அல்ல.உலக முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து, அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா...!அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?அதைச் சொன்னால் நீங்கள் இன்னும் வியப்படைவீர்கள்.பிறர் கண்ணீர் துடைப்பதையும், பிறர்க்கு உதவுவதையும் மதக் கடமையாகவே - இறை வழிபாடாகவே ஆக்கியுள்ள மார்க்கம் தான் இஸ்லாம்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ""இறைத் தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்ன?'' என்று வினவினார்.இந்த வினாவிற்கு இறைத் தூதர் என்ன விடை சொல்லி இருப் பார் என்று நினைக்கிறீர்கள்?
இறைவன் மீது நம்பிக்கை கொள்ளல் எனத் தொடங்கி இஸ்லாத்தின் அடிப்படைகளை எல்லாம் விலாவாரியாக விளக்கியிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்?அதுதான் இல்லை.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரே வார்த்தையில் விடை அளித்தார்கள்."பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்!'"அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர், இறை நம்பிக்கையாளர் அல்லர்' என்று அண்ணலார் ஓங்கி முழங்கினார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டதன் நோக்கம், மக்களின் உளப் பிணியைத் தீர்ப்பது மட்டுமல்ல, பசிப் பிணியைத் தீர்ப்பதும் தான்.அவருடைய அனைத்து அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும், இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்பதை வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.இதே வழிகாட்டுதல் தான் ரமலான் மாதத்திலும் பளிச்சிடுகிறது."ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்தேனும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்'"ஒரு மிடறு பாலைக் கொண்டாவது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுங்கள்'"இறை வழியில் தான தர்மங்களை வாரி வழங்குங்கள்'"வசதியுள்ளவர்கள் தங்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தைக் கணக்கிட்டு ஏழைகளுக்குக் கொடுத்தே ஆக வேண்டும்'-
இவை போன்ற எண்ணற்ற கட்டளைகள், நபிமொழி நூல்களில் நிரம்பி வழிகின்றன.பெருமானார்(ஸல்) அவர்களின் அதே கட்டளை தான், ஈகைத் திருநாளிலும் செயல் வடிவம் பெறுகிறது.எப்படி?பெருநாளன்று, யாரும் பசி- பட்டினியோடு இருக்கக் கூடாது என்று, இஸ்லாம் விதித்துள்ளது.அந்த மகிழ்ச்சியான நாளில், யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என்று அண்ணலார் கட்டளை இட்டுள்ளார்கள்.எல்லாம் சரி, ஆனால் கஞ்சிக்கே வழியில்லாத, கதியற்ற மக்களுக்கு ஏது பெருநாளும், திருநாளும்? அரிசிச் சோற்றுக்கு அவர்கள் எங்கே போவர்?இங்கு தான் இஸ்லாமியச் சட்டம் மிக அருமையாகச் செயல்படுகிறது.பணக்காரர்கள் மட்டுமல்ல, ஓரளவு வசதியுள்ள நடுத்தர மக்கள் கூட, பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குப் போவதற்கு முன்பாக "ஃபித்ரா' எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் தர வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.
நாம் சாப்பிடுவதற்கு என்ன அரிசியைப் பயன்படுத்துகிறோமோ, அதே தரத்தில், ஏறத்தாழ இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதன் கிரயத்தை, ஏழைகளுக்கு, பெருநாள் தர்மமாக வழங்கிட வேண்டும்.உங்கள் குடும்பத்தில் ஆறு பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆறு பேருக்கும் தலா இரண்டரை கிலோ அரிசி எனக் கணக்கிட்டு 15 கிலோ அரிசியை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்."ஃபித்ரா எனும் இந்தப் பெருநாள் தர்மத்தை யார் வழங்கவில்லையோ, அவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பூமிக்கும், வானத்துக்கும் இடையே அது தொங்கிக் கொண்டிருக்கும்' என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம், பெருநாளன்று எந்த ஓர் ஏழையும் பசியோடு இருக்கக் கூடாது; உணவின்றி வாடக் கூடாது; பிஞ்சுக் குழந்தைகள், பட்டினியால் தவிக்கக் கூடாது ன்பதேயாகும்.அதனால்தான் இந்தப் பண்டிகைக்கு ஈதுல் ஃபித்ரு- ஈகைத் திருநாள் என்று பெயர் வந்தது.ஆம்...!ஈகைத் திருநாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்...!பசிப்பிணி போக்கும் பெருநாள்...!வாசகர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்... !ஈத் முபாரக்!
நன்றி..
- சிராஜூல் ஹசன் , ஆசிரியர் சமரசம்
- சிராஜூல் ஹசன் , ஆசிரியர் சமரசம்