Monday, 4 November 2013

எட்டூருக்கு மணக்கும் மீன் குழம்பு!

   
       ''என்னதான் ஏ.சி. ஹோட்டல்ல இங்கிலீஷ் மூவி பார்த்துக்கிட்டே ஸ்பூன்ல சாப்பிட்டாலும், சாந்தி அக்கா கடை கீத்துக் கொட்டாய்ல சிமென்ட் பெஞ்சுல ஒக்காந்து, காரசாரமா சுடச்சுட மீன்குழம்பு ஊத்தி சாப்பிடுற சுகம் கிடைக்காது'' -மயிலாடுதுறை சுற்றுவட்டாரவாசிகள் நாக்குச் சப்புக்கொட்டியபடி சொல்கிறார்கள்.  

    தோசைக்கல்லில் வெந்துகொண்டு இருந்த மீனைத் திருப்பிப்போட்ட சாந்தி அக்காவிடம், மயிலாடுதுறை மக்களின் நாக்கைச் சப்புக்கொட்டவைக்கும் மீன் குழம்பின் ரகசியம் குறித்துக் கேட்டேன்.



    ''பக்கத்துலேயே தரங்கம்பாடி கடற்கரை இருக்கிறதால, கரைக்குவந்த அடுத்த நிமிஷமே கடைக்கு நல்ல மீன் வந்துடும். சீஸனுக்குத் தகுந்ததுமாதிரி மீன் கிடைக்கிறதால குழம்பு ருசியும் மாறும். வீட்டுக்கு அரைக்கிற பக்குவத்துலதான் கடைக்கும் மிளகாய்த் தூள் அரைப்போம். மீனை  சுத்தமா தேய்ச்சு அலசி, அரிசி களைஞ்ச தண்ணியில கடைசியா ஒருமுறை கழுவுறதால கவுச்சி வாடை இருக்காது. பலப் பொடி மீனுங்களை (வெளவால், பொருவா, வஞ்சனை) வாங்கி பக்குவமா வெட்டி, அதுக்கு ஏத்த பக்குவம் சேர்த்தாலே மீன் குழம்பு வாசனை எட்டு ஊருக்குத் தூக்கும். மாங்காய் சீசன்ல மாங்காய் சேர்த்தால், ருசி ஆளை மயக்கும்'' என்ற சாந்தி அக்கா மீன் குழம்பின் செய்முறை பற்றி விளக்கினார்.

தேவையான பொருள்கள்:

பொடிமீன் - 1 கிலோ

புளி -  எலுமிச்சம் பழ உருண்டை அளவு 

குழம்பு மிளகாய்த் தூள் - 4 டேபிள் ஸ்பூன் 

தக்காளி - 100 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

தேங்காய் - 1/2 மூடி

எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு



செய்முறை:

ஒரு லிட்டர் தண்ணீரில் புளியைக் கரைத்து மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்த பிறகு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு, சிவக்க வதக்க வேண்டும். பின்னர் புளிக் கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிவந்த பிறகு, மீன்களைப் போட வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து விழுதாக அரைக்கப்பட்ட தேங்காயைச் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கினால் மணக்க மணக்க மீன் குழம்பு ரெடி!


விகடன் இணையதளத்தில் படித்தது.

No comments:

Post a Comment