Sunday 17 November 2013

வண்ண மீன் வளர்க்கறீங்களா?


மீன் தொட்டியை அலங்கரிப்பது அவசியம்!

மீன் வளர்ப்பு என்பது ஒரு கலை. தொட்டிகளில் நீந்தும் மீன்களை பார்த்தாலே மனதில் அமைதி குடியேறும். அழகிற்காக மட்டுமின்றி மன உற்சாகத்திற்காகவும் மீன்களை வளர்க்கின்றனர். வசதி படைத்தவர்கள்தான் மீன் தொட்டி வைத்திருப்பார்கள் என்பது போய், தற்போது நடுத்தர மக்களும் அதிக அளவில் மீன்களை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். வண்ண மீன் வளர்ப்பு குறித்தும் பராமரிப்பு குறித்தும் மீன்வளர்ப்பாளர்கள் கூறியுள்ள டிப்ஸ் உங்களுக்காக.

மீன் தொட்டியின் விலை 100 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. உள் அலங்காரத்துக்கு என்று ஸ்பெஷலாக மர வேலைபாடுகளுடன் கூடிய ஸ்டாண்ட் சேர்ந்த கலைநயமிக்க தொட்டிகள் 10 அயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது போன்ற மீன் தொட்டிகளை பெரிய ஹோட்டல், மருத்துவமனைகளில் வைத்துள்ளனர்.

வீடுகளில் வைப்பதற்கென்று விலைகுறைவான, கலைநயம் மிக்க தொட்டிகளும் உள்ளன. மீன் தொட்டிக்குள் சின்ன சின்ன பாறைகள், கூழாங்கற்கள், செடிகள் போன்றவற்றை கொண்டு அழகுபடுத்தினால்தான் அவை அதற்குரிய இடங்களில் வசிப்பதைப் போல உணரும்.

வாஸ்து மீன்கள்

ஒரண்டா கோல்டு, சிங்கதலை கோல்டு, ரெட் கேப் கோல்டு, பேர்ல் ஸ்கேல் கோல்டு, ரூயிங் கோல்டு போன்ற மீன் வகைகளை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். வசதியானவர்கள் விரும்பும் ஏஞ்சல் மீன்கள், பார்ப்பதற்கு மதிப்புடையதாக இருந்தாலும் விலை அதிகம் இல்லை.

இதைத்தவிர சீன வாஸ்து மீனான புளோரா, அரவானா மீன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்படும் 5 இஞ்ச் அளவுள்ள சில்லி ரெட் அரவானா எனப்படும் வாஸ்து மீன் ஒன்றின் விலைமட்டும் ரூ.25,000!. இத்துடன் கிரீன் ஸ்னோவொய்ட், சில்வர் பிளாக் வகை மீன்களுக்கு உண்டு. இந்த வகை மீன்களுக்கு சிங்கப்பூர் அரசால் சான்றிதழும் வழங்கப்படுகிறதாம். இந்த மீன் ஒன்றின் விலை ரூ. 1,200.


கடல் மீன்கள் வளர்க்கலாம்

கடல் மீன்களை தொட்டியில் வளர்க்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பட்டர்பிளை ஏஞ்சல், புளூரிங் ஏஞ்சல் போன்ற மீன்கள் கட்டாயமாக கடல் நீரில்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் செயற்கை உப்பு கலந்த நீரில் வளர்க்கலாம். ஆனால் செயற்கை உப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 120. சாதாரணமாக 3 அடி தொட்டிக்கு கடல் மீன்கள் வளர்க்க ரூ. 10,000 வரை செலவாகும்.


இருவேளை உணவு

இந்த மீன்களுக்கு என்று தனியாக உணவுகள் உள்ளன. தையோ, டோக்கியோ, ட்ராகோ போன்ற பிராண்டட் உணவு, வைட்டமின் உணவு, பதப்படுத்தப்பட்ட டிரை வார்ம்ஸ் என்று பல வகைகள் உள்ளன. காலை ஒரு முறை மாலை ஒரு முறை என்று உணவளித்தால் போதும்.

மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியேற்றி, புதிதாக தண்ணீர் விடவேண்டும். அப்பொழுதுதான் மீன்கள் ஆரோக்கியமாக இருக்கும். மீன்களை வடிகட்டி நல்ல நீரில் பாதுகாப்பாக வைத்தபின்னர் தண்ணீரை வெளியேற்றி தொட்டியை கழுவவேண்டும்.


தொட்டிகளில் உள்ள வேஸ்டான செடிகளை அகற்றிவிட்டு, பின்னர் தண்ணீரை நிரப்பி அழகு படுத்திய பின்னர் மீன்களை மறுபடியும் தொட்டியில் விடவேண்டும். அடிக்கடி மீன் தொட்டியை சோதனை செய்து அதன் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.

No comments:

Post a Comment