Monday 18 November 2013

ஆலயங்களில் சித்தர்கள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திருவலஞ்சுழி என்னும் கிராமத்தில் உள்ள கோவிலில் சுவேத விநாயகர் என்னும் பெயரில் வெள்ளைக் கல்லால் செய்யப்பட்ட பிள்ளையார் இருக்கிறார். இவரது துதிக்கை வலப்பக்கம் சுழித்துக் கொண்டிருப்பது போல் இங்கே காவேரி நதியும் திரும்பி வலது பக்கமாச் சுழித்து ஓடுகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பவர் ஹேரண்ட மகிரிஷி. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் உள்ள அகஸ்தியம் பள்ளி என்கிற ஊர் பார்வதி தேவிக்கு இமயமலையில் நடந்த திருமணத்தை அகஸ்தியர் இந்தத் தலத்திலிருந்தே தரிசித்திருக்கிறார்.

* தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவாவடுதுறையில் கோமுக்தி ஷேத்திரத்தில் உள்ள மாசிலாமணிப் பெருமாள் என்னும் சிவன் கோவிலில் அழகிய விநாயகர் சன்னதி உள்ளது. அழகிய விநாயகர் அகஸ்தியருக்கு வேத தத்துவம், சித்தாந்தம் அனைத்தையும் உபதேசித்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இந்த விநாயகர் சன்னதி அருகில் அகஸ்தியருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது.

* சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் திருத்தலத்தில் சிவன்-பார்வதி அகஸ்தியருக்குத் தங்கள் திருமணக் கோலத்தைக் காட்டிய இடம் மூலஸ்தான லிங்கத்தின்பின்புறம் உள்ளது.

* நாகப்பட்டினம் ஒரு காலத்தில் ஆங்கிலேயரின் துறைமுகமாக விளங்கியது. இதற்கு `நாகைக் காரோணம்' என்கிற பழம் பெயர் உண்டு. ஒரு ரிஷியைக் காயத்தோடு (உடம்போடு) வானுலகுக்கு ஆரோஹணம் செய்யும்படி இறைவன் அருளியதால் காயாரோஹணம் என்றாகி பின்னர் அது மருவிக் `காரோணம்' என்கிற தலப் பெயருடன் சேர்ந்தது.

* மயிலாடுதுறைக்கு அருகே உள்ள திருக்கடையூரில் உள்ள சிவன் கோவிலில் உள்ள சிவன் பெயர் அமிர்தகடேசுவரர், அம்பாள் அபிராமி. இங்கு ஒரு பக்தர் அபிராமி அந்தாதி இயற்றினார். சிவன் யமனை அடக்கி மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவித்துவம் அளித்த திருத்தலம் இது.

* லால்குடியில் உள்ள சிவன் கோவில் சாமியின் பெயர் சப்தரிஷீச்வரர். ஒரு சாபத்தால் அவதியுற்ற சப்தரிஷிகளான அத்திரி, பிருகு, வசிஷ்டர், புலஸ்தியர், கௌதமர், ஆங்கிரஸ், மரீசி ஆகியோர் இந்த இடத்திலிருந்து முற்காலத்தில் சிவனை நோக்கித் தவமிருந்து சாபவிமோசனம் பெற்றதால், இங்குள்ள சிவனுக்கு சப்தரிஷீச்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.


* சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீசுவரர் கோவில் இறைவன் வால்மீகி மகரிஷிக்குத் திருநடன தரிசனம் கொடுத்த தலமாகும்.

* திருச்சியிலுள்ள திருவானைக் காவல் அக்காலத்தில் ஜம்பு மரங்கள் நிறைந்த பெரும் காடாக இருந்திருக்கிறது. சிவபெருமானின் ஆணைப்படி ஜம்பு மகரிஷி காவேரி ஆற்றங்கரையில் (இப்போது ஆலயம் இருக்குமிடம்) அமர்ந்து தவம் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு நாவல் பழம் தண்ணீரில் மிதந்து வந்து அவர் பாதத்தில் படுகிறது.

அதனை அவர் எடுத்து சாப்பிட்டுக் கொட்டையை உண்டதாகவும், அதனால் அவர் சிரசில் மரம் முளைத்ததாகவும் கூறப்படுகிறது. ஜம்பு மகரிஷி இங்கே தவமிருந்து மரமாகி விட்டிருக்கிறார். இறைவனின் பின்புறப் பிராகாரத்தில் இந்த வெண் நாவல் மரம் இன்றும் இருக்கிறது. தினமும் ஒவ்வொரு பழம் பழுத்து இறைவனின் மேல் விழுகிறது. ஜம்பு மகரிஷி இறைவனை நோக்கித் தவமிருந்து இடம் என்பதால், இறைவனுக்கு ஜம்புகேசுவரர் என்ற பெயரும் உண்டு.

* வசிஷ்ட மகரிஷி அனுதினமும் சிவபூஜை செய்யக்கூடியவர். ஒருநாள் அவர் பூஜைக்காக சிக்கல் நவநீதேஸ்வரர் ஆலயத்து மல்லிகை வனத்தில் புஷ்பம் பறிக்க வருகையில், அங்கிருந்த பால் தடாகத்தினைப் பார்த்து வியப்படைந்து, இது எதனால் ஏற்பட்டது என்பதைத் தன் ஞானதிருஷ்டியில் தெரிந்து கொண்டார்.


 புஷ்பக் கூடையைக் கீழே வைத்து விட்டு அந்தப் பால் தடாகத்திலிருந்து வெண்ணையைத் திரட்டி எடுத்து அதை சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்கிறார். பூஜையை முடித்து விட்டு ஆத்ம சம்ஹிதத்திற்காக லிங்கத்தை எடுக்கும்போது, லிங்கம் வராமல் சிக்கிக் கொண்டது. அப்போது அந்தப் பக்கமாக வந்த கிருஷ்ணபரமாத்மா லிங்கத்தின் தலையின் மீதிருந்த வெண்ணையைக் கிள்ளி எடுத்து விடுகிறார்.

எடுத்த வெண்ணையை உட்கொள்ள, போகும்போது அந்த வெண்ணை வாயிலும் விழாமல், பூமியிலும் விழாமல் அவருடைய ஆட்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையே சிக்கிக் கொண்டதால் இத்தலத்திற்கு சிக்கல் என்ற திருநாமம் ஏற்படக் காரணமாயிற்று. வெண்ணையிலிருந்து தோன்றியதால் சிவபெருமானுக்கு நவநீதேஸ்வரர் என்று பெயர்.

* ஆயிரம் ஆண்டுக்கு முன் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி ஆலயத்தில் இருந்த சாரமா முனிவர் என்பவர் செவ்வந்தி மலர் பயிரிட்டு அம்மலர் கொண்டு மூன்று வேளையும் இங்குள்ள இறைவனை வழிபட்டு வந்ததால் சிவனுக்கு செவ்வந்தி நாதர் என்னும் பெயர் ஏற்பட்டது. பூவாணிகம் செய்து வந்த ஒருவன் சாரமா முனிவரின் நந்தவனத்திற்குள் புகுந்து, செவ்வந்தி மலர்களை எல்லாம் பறித்துக் கொண்டு போய், அரசனது மனைவிக்குக் கொடுத்து வந்தான்.

மலர் களவு போவதை முனிவர் மறைந்திருந்து கவனித்து, கனவின் காரணம் அறிந்து அதை மன்னனிடம் முறையிட்டார். மன்னன் கள்வனை அழைத்துக் கண்டித்தானே தவிர தண்டிக்கவில்லை. இச்செயலைக் கண்டு முனிவர் மனம் வருந்தி இறைவனிடம் சென்று முறையிட, கிழக்கு முகமாக இருந்த தாயுமான சுவாமி மேற்கு முகமாகத் திரும்பிக் கொண்டார். காற்று, மேகங்கள் இவற்றைக் கொண்டு உறையூர் மீது மண் மாரி பொழியச் செய்தார்.

அப்போது அரசனும், அரசியும் அரண்மனையை விட்டு வெளியேற, உறையூர் முழுவதும் மண் மாரியால் அழிந்தது. அந்த மண்மாரி மன்னனைப் பின் தொடர்ந்தது. மன்னன் இறந்து போனான். நந்தவனத்தில் இருந்து கள்வன் மலர் திருடிய வேளையில், தேவத்தத்தன் ஒருவன் சங்கு ஊதித் தெரிவித் திருக்கிறான். அதன் அடையாளமாகக் கொடி மரத்திற்கு அடியில் ஒரு கல் திருமேனி சங்கு ஊதும் நிலையில் இருப்பதை இப்போதும் அங்குச் சென்றால் காணலாம்.

* கும்பகோணம் நாச்சியார் கோவில் திருத்தலம் ஒரு புராணப் புகழ் பெற்ற தலம். மேதாவி முனிவர் சுகந்தவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் மணி முத்தாற்றின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருக்கையில் திருமகள் பூமிக்கு எழுந்தருளுகிறார். வஞ்சுள மரத்தினடியில் நின்று கொண்டிருந்த அச்சிறுமியை எடுத்து அவளுக்கு வஞ்சுளவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்.

பெருமாள் பூமிக்கு அவதாரமெடுத்து மேதாவி முனிவரது ஆசிரமம் வந்து அவரிடம் அவரது மகளைத் திருமணம் செய்து தரும்படி கேட்க, முனிவர் பெரிதும் மகிழ்ந்து அவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைக்கிறார். இத்திருத்தலத்தில் உள்ள வகுள மரம் (மகிழ மரம்) தெய்வத்தன்மை வாய்ந்தது.


மேதாவி முனிவரால் வளர்க்கப்பட்டது. கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் திருவாரூர் பாதையில் 9 கி.மீ. தூரத்தில் உள்ளது திருநறையூர் திருத்தலம். இங்கே சித்தர்கள் வழிபட்டதால், இறைவன் இங்கே சித்தராகக் கோவில் கொண்டிருக்கிறார். கோரக்கச் சித்தருக்கு இறைவன் காட்சி கொடுத்ததால், அவருக்கு சித்தநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாச முனிவரின் சாபத்தால் நரையான் பறவை ரூபம் எடுத்து சித்தநாதனை வழிபட்ட திருத்தலமிது.

மேதாவி மகரிஷி கடுந்தவம் புரிந்து இந்த ஆலயத்தில் மஹாலட்சுமியைப் புத்ரியாக ஈன்றெடுத்து, இங்கு நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகின்ற தலத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்த அதி அற்புத சக்தி வாய்ந்த தலமாகும்.

*திருவாரூருக்கு கிழக்கே 12 கி.மீ. சிக்கலுக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புராணச் சிறப்புடைய திருத்தலம் கேடிலியப்பர் திருத்தலம். இத்திருத்தலம் வசிஷ்டர், மார்க்கண்டேயர் ஆகியோர் பூசித்து அருள் பெற்ற திருத்தலமாகும்.

* தில்லை எல்லைக்காளியம்மன் திருத்தலம் (சிதம்பரம்) பதஞ்சலி முனிவரும், (ஆதிசேடன்), வியாக்கிர பாதரும் (புலிக்கால் முனிவர்) இறைவனது நடனங்களைக் காண இறைஞ்சிய தன் பொருட்டு, ஆடல் வல்லானின் ஆனந்த தாண்டவம் நிகழ்ந்த தலகுமாகும்.

* திருநெல்வேலிக்குக் கிழக்கில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணிக்கு வடகரையில் உள்ளது சீவலப்பேரி என்னும் கிராமம். இங்குள்ள சீவலப்பேரி துர்க்கையை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஒரு வரலாறு உண்டு.

* சேலம் புதிய பஸ் நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்செங்கோடு திருத்தலம். அம்மை, அப்பன் என்று தனித்து இல்லாமல் இருவரும் ஒருவராக... அர்த்தநாரியாகக் காட்சி தரும் தலம் இது. கருவறையில் அம்மை-அப்பனுடன் சற்றுக் கீழே ஒரு தொண்டு கிழவர் நிற்கிறார். இவர்தான் பிருங்கி முனிவர்.


 * சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி (சின்னக்கடை மாரியம்மன்) ஆலயத்திற்கு அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்கள் வந்து அன்னையைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

* திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி சமேத ஸ்ரீ வடிவுடை அம்மன் ஆலயத்திற்கு வந்து அருள் பெற்றவர்கள்: வான்மீகி முனிவர், வியாச முனிவர், அகத்தியர், உபமன்யு முனிவர் ஆகியோர்.

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் தலத்திற்கு மணவாள முனிவர் எழுந்தருளி பார்த்தசாரதிப் பெருமாளை மங்களா சாசனம் செய்துள்ளார். இங்கு அத்ரி முனிவருக்கு நரசிம்மன் காட்சி தந்திருக்கிறார். சுக்கிராச்சாரியார் வழிபட்ட மைலாப்பூர் திருத்தலமே இப்போது நாம் காணும் அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்!...

* சென்னை கோடம்பாக்கம் பகுதி முதலில் புலியூர் என்று அழைக்கப்பட்டது. அதற்குக் காரணம் புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) இங்கே வந்து சிவலிங்கப் பெருமானைக் கண்டு பூசித்ததால் இக்கோயிலை ஒட்டி அமைந்த ஊருக்குப் புலியூர் என்றும், அதில் எழுந்தருளிய பெருமானுக்குப் புலியூர் பெருமான் (வியாக்கிர புரீஸ்வரன்) என்கிற பெயரும் எழுந்தன.

* கோடம்பாக்கத்தில் உள்ள பரத்துவாசேசுவரர் கோயில் திருத்தலம் பரத்துவாச முனிவர் பூசித்த தலம். ஆதலால், இங்குள்ள இறைவனுக்கு பரத்துவாசேசுவரர் என்று பெயர்.

* சென்னை பாடியில் பரத்துவாச முனிவர் `வலியன்' என்கிற கருங்குருவி வடிவமெடுத்து இத்தலத்து இறைவனை வழிபட்டதால் இத்தலம் வலிதாயம், அதாவது `திருவலிதாயம்' என்று அழைக்கப்படுகிறது. அதில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருவலிதாயநாதர். அகத்திய முனிவர், வாதாபி, வில்லவன் என்னும் இரு அரக்கர்களைக் கொன்ற கொலைப்பாவம் நீங்க இறைவனை வழிபட்டு பேறு பெற்ற தலம் இது.

* பூவிருந்தவல்லியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆலயம் ஜகந்நாத பெருமாள் ஆலயம். பிருகு முனிவர் பிரம்மாவிடம் தவம் மேற்கொள்வதற்கு மிகவும் புனிதமான இடம் எதுவென்று கேட்க, அதற்கு மிகவும் பொருத்தமான இடம் திருமழிசையே என்று பிரம்மா கூற, பிருகு முனிவரும் அங்குச் சென்று குளக்கரையின் ஓரம் அமர்ந்து தவம் செய்து வழிபட்டதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தக் குளத்திற்கு பிருகு புஷ்கரணி என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.

* கிருஷ்ணாம்பேட்டை டாக்டர்.நடேசன் சாலையில் 15 சென்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது தீர்த்த பாலீசுவரர் திருக்கோயில். அகத்திய முனிவர் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதாகக் கூறப்படுவது இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். *

No comments:

Post a Comment