அந்த மாணவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். மிகவும் சுறுசுறுப்பான அவன் தினம்தோறும் தனது ஓய்வு நேரத்தை கல்லூரியின் நூலகத்திலேயே கழிப்பான். அதுபோக 400, 500 பக்கங்களைக் கொண்ட பெரிய பெரிய புத்தகங்களை எடுத்துச் செல்வான். இரண்டு நாட்களில் அதைத் திருப்பிக் கொடுத்து விட்டு அதே போன்று வேறு புத்தகங்களை எடுத்துச் செல்வான். இது வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் நூலகருக்கு மட்டும் அந்த மாணவன் மீது சந்தேகம் இருந்தது.
இவ்வளவு பெரிய புத்தகங்களை எல்லாம் இரண்டு, மூன்று நாட்களில் எல்லாம் படிக்கவே முடியாது என்பது அவர் எண்ணமாக இருந்தது. இந்த மாணவன் சும்மா கௌரவத்திற்காக இதையெல்லாம் எடுத்துச் செல்கிறான், இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
ஒருமுறை கல்லூரி முதல்வர் நூலக ஆய்விற்காக வருகை தந்திருந்தார். வருகைப் பதிவேட்டைப் பார்வையிட்டவர், அந்த மாணவன் மட்டும் அதிக புத்தகங்களை எடுத்துச் சென்றிருப்பது குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார். நூலகரிடம் காரணம் வினவினார். நூலகர் அந்த மாணவன் பற்றிய தனது எண்ணத்தையும் சந்தேகத்தையும் தெரிவித்தார். ஆனால் முதல்வரால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
அப்போது அந்த மாணவன் அங்கே வந்தான். அவன் கையில் இரண்டு நாட்களுக்கு முன்னால் எடுத்துச் சென்றிருந்த மிகப் பெரிய புத்தகம் இருந்தது. முதல்வர் அதை வாங்கிப் பார்த்தார். மெல்ல அதன் பக்கங்களைப் புரட்டியவர் அதிலிருந்து பல கேள்விகளை அந்த மாணவனிடம் கேட்கத் தொடங்கினார். மாணவன் சளைக்காமல் ஒவ்வொன்றிற்கும் சரியான விடைகளைச் சொல்லத் தொடங்கினான்.
முதல்வர் கேட்கக் கேட்க அவனும் சளைக்காமல் சரியான விடைகளைக் கூறினான். முதல்வருக்கோ மகிழ்ச்சி. நூலகருக்கோ,
‘இப்படிப்பட்ட புத்திசாலி மாணவனைத் தவறாக நினைத்து விட்டோமே!’
என்று மன வருத்தம்.
முடிவில் அந்த மாணவனைத் தட்டிக் கொடுத்த முதல்வர்,
‘இனிமேல் இவன் எப்போது, எந்தப் புத்தகம் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்க வேண்டும்’ என்று நூலகருக்குக் கட்டளையிட்டு விட்டுச் சென்றார்.
இவ்வாறு இளமையிலேயே கல்வி தாகத்துடனும் அற்புதமான நினைவாற்றலுடன் விளங்கிய அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
No comments:
Post a Comment