இறந்தவர்கள் படங்களை
பூஜையில் தெய்வ படங்களுடன் மாட்டக் கூடாது. இறந்தவர்கள், தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர
அவர்கள் தெய்வம் அல்ல. அதனால் இறந்தவர்கள் படங்கள் தனியாக வைத்து பூஜை செய்வது
நல்லது.
தெய்வங்களுக்கு பொதுவாக நாம் எந்த மலரால்
அர்ச்சனை செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் இப்பிறவியில் மட்டுமேயன்றி, மறுபிறவிக்கும்
அது பயன் தரும். அலங்காரத்திற்காக பயன்படும் எதுவுமே பூஜையறையில் வைக்கக்கூடாது.
ஒரு படம்வைத்து பூஜை செய்தாலும் அது உருப்படியாக இருக்க வேண்டும். தூசி, ஓட்டடை
படிந்து சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக் கூடாது. பழைய படங்கள், உடைந்த
பொம்மைகள் மற்றும் கறைபடிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்கள் கண்டிப்பாக
பூஜையறையில் வீட்டிலேயே இருக்கக் கூடாது. சிலபேர் முப்பாட்டனார் காலத்தில் உள்ள
படங்கள், கடையில் விற்கும் சக்கரம், இயந்திரங்கள், உறவினர், நண்பர்கள்
கொடுத்தார்கள் என்று பூஜையறை முழுவதும் படங்களை ஒட்டி அது பாதி கிழிந்த நிலையில்
இருக்கும். அப்படி இருக்கும் படங்களை நாம் கடலில் போடுவது நல்லது.
வீட்டில்
பூஜையறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு, மண் அகல்
மற்றும் இரண்டு குத்து விளக்குகள் ஏற்றினால் நல்லது. மூன்று அடுக்கு வைத்த விளக்கு
மிகச் சிறப்பானது. விளக்கு பூஜை செய்பவர்கள். ஒரு குத்து விளக்கில் ஐந்து முகமும்
ஏற்றி பூஜை செய்யலாம். விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு முகம் மட்டும் ஏற்றி செய்வது
அவ்வளவு உகந்தது அல்ல. வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு செம்பு தண்ணீர்
இருப்பது நல்லது. அதே போல் கற்பூரம் ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி
ஆரத்தி செய்வது நல்லது. எக்காரணத்திலும் கடலெண்ணெய் தீபம் ஏற்றக் கூடாது.
பூஜை அறையாக இருந்தாலும் சரி, சுவரில்
தெய்வ படங்கள் வைத்து பூஜை செய்தாலும் சரி, எதுவாக
இருந்தாலும் சுத்தமாக மனத் தூய்மையுடன் செய்தால் தெய்வம் நம்மில் குடிகொள்ளும்.
சுத்தமாக வீட்டை வைத்திருந்து பூஜை செய்தாலே எல்லா நலனும் நம்மைத் தேடிவரும்.