Monday, 31 March 2014

வீரபாண்டிய கட்டபொம்மன் சில தகவல்கள்


1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார்

இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலை
கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.

அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது .

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.

அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.
கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.

இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.

கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது .

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார்.

போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார் . ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.
நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன்
இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது. தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம். கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர் .

தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

'Divide and Rule'
என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?

5 comments:

  1. மாலதி31 March 2014 at 02:18

    நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  2. ஜனநாயக மன்னர்களின் ஆட்சியில் அவதிப்படுகிறோம்:(

    தகவல் பகிர்வுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  3. தகவல்களுக்கு நன்றி...

    அடிமை தான் வாழ்க்கையோ...?

    ReplyDelete
  4. இதுக்கெல்லாம் ஆதாரம்?

    ReplyDelete