Monday, 10 March 2014

டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் தேசத்தில்...

     டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் தேசத்தில் பக்தி இலக்கியங்கள் சொல்லும் திருமாலின் தசாவதார வரிசை டார்வினின் கோட்பாட்டை ஒட்டி இருப்பது யோசிக்கத் தக்க சுவாரசியமான விஷயம். பக்தியுடன் மட்டுமே பார்க்கையில் விடுபட்டுப் போகும் பல சூட்சும உண்மைகளை நாம் அறிவுப்பூர்வமாகவும் அலசினால் எளிதில் கண்டு விட முடியும். இனி திருமாலின் அவதாரங்கள் பத்தையும், அவை டார்வின் கோட்பாட்டோடு எப்படி ஒத்துப் போகிறது என்பதையும் பார்ப்போம். 1. மச்ச அவதாரம்: மச்ச என்றால் மீன் என்று பொருள். பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது என்பதே டார்வினின் கண்டுபிடிப்பு. அப்படியே தான் திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் உள்ளது. பிரளய காலத்தில் மச்ச அவதாரம் எடுத்து திருமால் உலகைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. 2. கூர்ம அவதாரம்: ‘கூர்மம்என்றால்ஆமைஎன்று பொருள். பரிணாம வளர்ச்சியில் நீரில் வாழும் உயிரினம் நீர், நிலம் இரண்டிலும் வாழும் உயிரினமாக மாற்றம் அடையும் என்று உள்ளது
   எனவே நீர், நிலம் இரண்டிலும் வாழக்கூடிய ஆமை அதற்கு ஏற்றதாக உள்ளது. பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடையும் போது மேரு மலையைத் தாங்கி நிறுத்த திருமால் இந்த கூர்மாவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. 3. வராக அவதாரம்: ‘வராகம்என்றால்பன்றிஎன்று பொருள். பரிணாம வளர்ச்சியின் கொள்கைப்படி நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து கொண்டு இருந்தவை ஒரு காலக் கட்டத்தில் முற்றிலும் நிலத்தில் வாழ்பவையாக மாறின என்று சொல்கிறார்கள். அதற்கு ஏற்றபடி, இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த மூன்றாவது அவதாரமாக வராக அவதாரத்தை புராணங்கள் கூறுகின்றன. 4. நரசிம்ம அவதாரம்: நரனாகிய மனிதனும், சிம்மம் ஆகிய மிருகமும் சேர்ந்த கலவை நரசிம்மம். நில வாழ்பவைகளாக இருந்த விலங்கினம் பரிணாம வளர்ச்சியில் அடுத்த நிலையாக சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி, மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது. இரணியன் என்ற அரக்கனை அழித்து உலகைக் காக்கவும், பிரகலாதன் என்ற பக்தனின் நம்பிக்கையை மெய்ப்படுத்தவும் திருமால் எடுத்த இந்த நான்காவது அவதாரத்தில் அவர் மனித உடலும், சிங்கத்தின் முகமும் கொண்டிருந்தார். 5. வாமன அவதாரம்: பாதி மனிதன், பாதி மிருகம் என்ற நிலையைத் தாண்டி முழு மனிதனாக மாறுவது பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை. இதில் மனிதன் முழு வளர்ச்சி அடைந்து விடாத குள்ள உருவமாக வாமனர் காட்சி அளிக்கிறார். அசுரர் களின் அரசனான மகாபலியின் ஆதிக்கத்தில் இருந்து தேவர்களைக் காக்கவும், மகாபலியின் கர்வத்தை அழிக்கவும் திருமால் எடுத்த ஐந்தாவது அவதாரம் இது. 6. பரசுராம அவதாரம்: ஆதிமனிதன் மிருகங்களையும் எதிரிகளையும் மூர்க்கமாகத் தாக்கி தன் சக்தியை ஸ்திரப்படுத்திக் கொண்டது பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை. தசாவதாரத்தின் ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரத்தில் திருமால் மிகவும் மூர்க்க மனிதராக சித்தரிக்கப்பட்டுள்ளார். கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். இந்த அவதாரத்தில் பரசுராமர் போர்க்குணம் கொண்டவராகக் காட்டப்படுகிறார். 7. ராம அவதாரம்: காட்டிலும், நாட்டிலுமாக மாறி மாறி வசித்தது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை. ராவணனைக் கொல்ல திருமால் எடுத்த ராமாவதாரத்தில் ராமர் அப்படியே காட்டிலும், நாட்டிலும் வாழ்ந்து வருகிறார். இந்த அவதாரத்தில் அறிவு கூர்மைக்கும், அசாத்திய பலத்திற்கும் பெயர் போன அனுமன் என்ற முக்கிய கதாபாத்திரம் மூலம் குரங்கினத்தின் அபார வளர்ச்சியும் சுட்டிக் காட்டப்படுகிறது
         (நீர் வாழ்வன, நீர்நிலம் வாழ்வன, நிலம் வாழ்வன, மிருகம் மனிதன் கலந்த இனம் என்று படிப்படியாய் தசாவதாரப் பரிணாம வளர்ச்சியில் அடுத்ததாக முழு மனிதன் என்று காட்டப்பட்டாலும், டார்வினின் குரங்கின் அபார வளர்ச்சி பின் மனிதனாக முடிந்தது என்னும் கோட்பாடு வேறு விதத்தில் ராமாவதாரத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் மனிதனான ராமனுக்கு இணையாகவும் உதவியாகவும் நடந்து கொள்ளும் சுக்ரீவன், அனுமன் போன்ற கதாபாத்திரங்களில் குரங்கினங்களின் மிக உயர்ந்த நிலை வெளிப்படுகிறது.) 8. பலராம அவதாரம்: காட்டை முழுமையாக விட்டுவிட்டு நாட்டில் வாழ ஆரம்பித்த மனிதன் தன் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் என்பது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை. திருமாலின் எட்டாவது அவதாரமான பலராமர் விவசாயம் செய்வதைக் குறிக்கும் விதத்தில் கலப்பையைத் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார். 9. கிருஷ்ண அவதாரம்: விவசாயம் செய்வதோடு கால்நடைகளையும் மேய்த்து வாழும் மனிதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக் கட்டம். ராம அவதாரத்தில் முழுமையான மனிதன், அதாவது புருஷோத்தமன், என்ற நிலையை அடைந்த பின் பலராம அவதாரத்தில் சற்று இறை தன்மையை எட்டி, கிருஷ்ணாவதாரத்தில் முழுமையாக இறை தன்மையைப் பெற்று விடுவதாக தசாவதாரத்தில் காட்டப்படுகிறது
         மனிதனின் உணர்வின் உயர்வுகள் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அலசப்படவில்லை என்றாலும் தசாவதாரத்தில் இந்த உயர்வுகள் துல்லியமாய் வளர்ச்சி அடைவதும் காட்டப்பட்டுள்ளது என்பது சிறப்பு. 10. கல்கி அவதாரம்: மனிதன் என்ற நிலையை அடைந்த வரை ஆராய்ந்து வந்த சார்லஸ் டார்வினின் ஆராய்ச்சி அத்துடன் நின்று விட்ட போதிலும் பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஒரு முடிவு இல்லை. கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாக புராணம் கூறுகிறது. ஆயுதங்களும், வாகனங்களும் கொண்ட அவதாரமான கல்கி, தினம் தினம் மனிதன் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருப்பதையும், விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் அவன் மகாசக்தியாக மாறுவதையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். மேலைநாட்டு அறிஞர்கள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்து அறிந்து கொண்ட பரிணாமவியல் கொள்கை இந்து மதத்தின் தசவதாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏறத்தாழ தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது வியப்பானதல்லவா.

2 comments:

  1. ஒவ்வொரு அவதார விளக்கத்தின் ஒப்பீடு அருமை... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஊக்குவிப்பு உற்சாகம் தருகிறது. நன்றி. நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள்... மேலும் ஒரு தகவல் தேவை. வீட்டிலிருந்தே ஆன் லைனில் சம்பாதிப்பது குறித்து தகவல் இருந்தால் தெரிவியுங்கள்.

      Delete