சர்வதேச தகவல் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ஊடக பணியாளர்கள் என 126 பேர் இந்த வருடம் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. சிரியா நாடு 2வது முறையாக இந்த வருடமும் பத்திரிக்கையாளர்களுக்கு ஆபத்தான நாடு வரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தலா 13 மரணம் என்ற அளவில் 2 மற்றும் 3வது இடங்களை பெற்றுள்ளன.
நிருபர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்களில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை மேற்பார்வை செய்வது போன்ற பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையிலான ஆய்வில், சிரியாவில் 19 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது. குறைந்தது 18 வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் மற்றும் 20 சிரியா நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் சிறை பிடிக்கப்பட்டோ அல்லது கடத்தப்பட்டோ உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை மையமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பு தனது அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பலியான 13 பேரில் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், மற்ற 4 பேர் சூறாவளி பேரிடர் நிலைமையை பற்றி அறிந்து கொள்ள சென்றபோது பலியானதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.இதேபோன்று, இந்தியாவில் 7 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடைபெறவில்லை. மேலும், 2 பேர் இன கலவரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோதும் மற்ற 4 பேர் விபத்துகளில் சிக்கியும் பலியாகியுள்ளனர் என ஆய்வு தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment