Tuesday 4 February 2014

ஆறுபடை வீடு கொண்ட திருமுருகா!

கதை எல்லாம் கேட்கிறதுக்கு முன்னாலே கொஞ்சம் பாடமும் படிச்சுப்போம். ஆற்றுப்படை என்பது தான் ஆறுபடை என்று மாறியது என்று தெரிந்துகொண்டோம் இல்லையா?? மதுரைமாநகர்ப் பதிவிலே திருப்பரங்குன்றம் பற்றி எழுதும்போது இந்த விஷயம் விட்டுப் போயிருக்குக் குறிப்பிட்டுச் சொல்ல. படைவீடு என்றால் படைகள் தங்கும் இடம். ஆனால் இதுவோ முருகன் பக்தர்களுக்கு அருளிய இடங்கள். ஆகவே அந்தப் படைவீட்டுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம் இங்கே எல்லாம் பக்தர்களுக்கு அருளவென்று முருகனை ஆற்றுப் படுத்தி வைத்த இடங்கள் ஆகும்.
இதில் முதலில் வருவது :
திருப்பரங்குன்றம்=தென்பரங்குன்றம் என்றும் சொல்லுவார்கள். இந்தக் கோயிலில் மூலவர் திருமணக் கோலத்தில் இருக்கும் ஷண்முகனும், தெய்வானையும். ஆகவே இங்கு இவரின் மாமாவான திருமாலும், ஈசனும், அம்பிகையும் குடிகொண்டிருக்கின்றனர். இங்கு தான் ஈசனை நோக்கி முருகன் தவம் இருந்ததாயும் கூறப்படுகின்றது. இந்த மலையே ஈசன் வடிவில் லிங்கம் போல் அமைந்திருக்கும். யோக சாஸ்திரத்தில் மூலாதாரத்துக்கு உள்ள படைவீடாக இதைக் கொள்வார்கள். உல்லாசம் என்னும் தத்துவத்தை அதாவது மனம் மகிழ்வு பெறுவதை இது குறிக்கின்றது. தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட கந்தனுக்கு உல்லாசம் தானே. ஒளிவடிவாகவும் முருகன் இங்கே இருப்பதாயும் சொல்லுவதுண்டு.
திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம். துன்பங்கள் நீங்குதல். சூரனைக் கொன்று அவனால் துன்பம் அடைந்த தேவர்களின் துன்பத்தை ஷண்முகன் இங்கே நீக்கினான். சூரனுக்கும் வாழ்வின் துன்பங்கள் நீங்கி சிவனாலோ, அல்லது சிவனுக்குச் சமம் ஆனவனாலோ மட்டுமே தான் கொல்லப் படவேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்த சூரனைக் கொல்லாது, அவனை இரு கூறாய்ப் பிளந்து அவனையும் தன்னுள் ஐக்கியம் செய்துகொண்டு அவன் துன்பத்தையும் இங்கே ஆறுமுகன் நீக்கிவிட்டான் அல்லவா?? நிராகுலம் அல்லது சுவாதிஷ்டானம் என்ற யோக சாஸ்திரத்துக்கான படை வீடு திருச்செந்தூர் ஆகும். அவனின் அருள் இங்கே அனைவருக்கும் கிடைப்பதால் அருள் வடிவாய் இருப்பதாயும் சொல்லலாம்.
திரு ஆவினன்குடி= மணிபூரகம். ஷண்முகன் இங்கே யோக வடிவில் காட்சி அளிக்கின்றான். எல்லாரும் துறவு மேற்கொண்டுவிட்டால் பின்னர் திருமணத்துக்குத் திரும்ப மாட்டார்கள். அல்லது திருமணம் செய்து கொண்டு மனைவியால் "கூறாமல் சந்நியாசம் கொள்"வோரும் உண்டு. ஆனால் இங்கே நம் ஆறுமுகனோ குழந்தையாய் இருக்கும்போதே சந்நியாசி ஆகிவிட்டானே. பழத்துக்கா கோபித்தான்?? தவ வடிவில் அவன் நமக்கு என்ன போதிக்கின்றான்? அனைத்தையும் துறந்து என்னிடம் வா என்றல்லவா சிவகுமாரன் கூப்பிடுகின்றான்? யோகத்தின் அர்த்தம் ஆன அவனே யோக வடிவில் நின்று பக்தர்களை யோகம் பற்றி அறிய வைக்கின்றான், தன் தவக் கோலத்தால். இந்தத் தவ வடிவம் எங்கேயும் காணக் கிடைக்காத ஒன்றல்லவோ?? இந்தத் தவக்கோலம் எனக்காவோ என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா? அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனையும் பாட வைத்த இந்தக் கோலம் இங்கே மட்டும் தான் காண முடியும்.
 திருஏரகம்-(சுவாமிமலை)= அநாகதம் = உபதேசம். அப்பனுக்கே உபதேசித்த பிள்ளை. சீடராக நீர் இருக்க, குருவாய் நாம் அமர்ந்து உபதேசிப்போம் எனத் தன் தந்தைக்கே உபதேசம் செய்த தகப்பன்சாமி அல்லவோ அவன். அவனே மந்திர வடிவு. அந்த மந்திர வடிவே மந்திரம் பற்றி உபதேசிக்கின்றது.

குன்று தோறாடல்= விசுத்தி.சல்லாபம். குறத்தி மணாளன் அவளோடும், தெய்வானையோடும் சேர்ந்து இருந்து காட்சி அளிக்கும் இடம் தணிகை மலை. சிலர் இது தான் கடைசி என்று சொல்கின்றனர். ஆனால் நம்ம ஜீவா அவர்கள் இது கடைசிக்கு முந்தியது என்று ஒரு பதிவு போட்டிருக்கின்றார். வேறு சில புத்தகங்களும் தணிகை மலை தான் விசுத்தி என்றும் சொல்கின்றது. இரு மனைவியரோடு சல்லாபமாய் கந்தன் அமர்ந்திருப்பதாலும், மனைவியரோடு இருக்கும்போது அவனை இன்னும் அதிகமாய் நெருங்க முடியும் என்பதாலும் எளிமை வடிவாய்க் காட்சி அளிக்கின்றான் எனலாம்.
பழமுதிர் சோலை = ஆக்ஞை = சர்வ வியாபகம் முருகன் குழந்தையாக இருக்கையில் ஒளவைக்குப் போதித்தது, சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டது இங்கே தான் என்று சொல்லுவார்கள். தானே தமிழும், தமிழே தானுமாய் இருப்பதை இங்கே முருகன் விளங்கக் காட்டியதால் அவனின் வியாபகம் நன்கு விளங்குகின்றது என்றும் சொல்லலாம்.


No comments:

Post a Comment