Friday, 14 February 2014

காதல் திருவிழா

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
சோழன் செம்பியன் எடுத்த திருவிழா
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்பர். இவனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பரம்பரையின் முன்னோர்களில் ஒருவன் என்று புறநானூற்றுப் புலவர் (49) மாற்றோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.
பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும் போற்றப்பட்டும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றியவன் தொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான்
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் கொண்டாடிய அவ்விழாவைப் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள், 'வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன் என்று குறிப்பிடுகின்றார்.
இந்திர விழா அல்லது காமன் விழா
தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் [3] குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.  
மேலும்காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழாபங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய நன்னாளில்) நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன்மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம்.

பின்பனிக் காலம்   
மகளிரும் மைந்தரும் தங்கள் மாடமாளிகையில் இளநிலா முற்றத்தில் அமர்ந்து கொண்டு இளவெயிலை அனுபவிக்கும் காலம் பின்பனிக் காலம். அக்காலத்தை ஆதித்த மண்டலம் மிதுன வீதியில் இயங்கும் காலமே பின்பனிக் காலம் என்று கூறினர். அத்தகைய பின்பனிக் காலமே, காதல் திருவிழா நடத்துதற்கு உரிய காலம் எனக் கண்டனர்.
குணதிசையில் அமைந்துள்ள தொண்டி நகரின் அரசன், வங்கத்திரளோடு திரையாக அளிக்கும் பொருள்களாகிய அகில்சந்தனம், வாசனைப்பொருள்,கருப்பூரம் முதலிய பொருளைச் சுமந்து கொண்டு கொண்டல் என்னும் காற்று நண்பனோடு கூடல் மாநகரில் வந்து புகுந்தான். காமவேளுக்கு எடுக்கப்படும் வில்விழாவைக் காண வந்த பின்பனிக் காலம் என்னும் அரசன் எவ்விடத்துள்ளான்? என்று இளங்கோ வினவுகின்றது நயமான இலக்கிய விருந்தாகும்.
வில்விழா
காதல் விழா, காமவேள் கையிலுள்ள கரும்பு வில்லைக் குறிக்கும் விதத்தில், அவ் வில்விழா என்றும் வழங்கப்பட்டுள்ளது.
கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள். அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தியைத் தேடிய ஆட்டனந்தி, காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள். அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது என்று ஆதிமந்தி தன் பாடலில் குறிப்பிடுகின்றாள்.
சிறந்த புகழுக்குரிய சோழ மன்னர்களில் கரிகால் சோழனும் ஒருவன். அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பூம்புகார் பெருநகரில் வில்விழா நடந்தது என்று ஆதிமந்தி கூறும் கூற்றுக்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை. விழா ஏற்பாடுகள்
காதல் விழாவின் போது நடைபெற்ற ஏற்பாடுகளை மணிமேகலை பட்டியலிட்டு காட்டுகிறது. அது, விழா நடத்தும் மன்னனுக்கும் மக்களுக்கும் அவ்விழாவில் இருந்த ஈடுபாட்டை உரைப்பதாக அமைந்துள்ளது.
காதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணற் பரப்புங்கள், ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள், விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள், உரையாற்றும் வல்லமை கொண்டோரெல்லாம் உரையாற்றுங்கள், சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள், கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள், வாதத்தை வாதத்தால் வாதிட்டு வாதத்தைத் தீர்த்து வையுங்கள், பகைவர்களைக் கண்டால் அவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள், அவர் இருக்கும் இடத்தை விட்டு அகன்று போய்விடுங்கள், வெண்மையான மணற் குன்றுகளில், மலர்ச் சோலைகளில், குளிர்ந்த மணலை உடைய ஆற்றங் கரையில், மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும் நீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச் சேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று செம்பியன் ஆணை பிறப்பிக்கிறான் என்பதில் இத்திருவிழாவிற்கு இருந்த மதிப்பும் ஏற்பாடுகளும் தெரியவருகின்றன.
காதலர் தங்குமிடம்
விழாவிற்குச் செல்லும் காதலர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்திற்குப் பொதுப்பெயராக, "மூதூர்ப் பொழில்" என்று பெயரிடப் பட்டிருந்தது. அவ்விடத்திற்கு, "இளவந்திகை" என்னும், சிறப்புப் பெயரும் இடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது காமதேவனுக்கு விழா எடுக்கும் தொடித்தோட் செம்பியனுக்குத் திறை செலுத்த காமதேவனே வருகின்றான் என்று விழாவைச் சிறப்பித்துக் கூறும் புலவர்,காமதேவன், வேனிலொடும் தென்றலொடும் சேர்ந்து திறை கொண்டு வந்தான் என்கிறார். காமதேவனின் விழாவுக்கு வரும் காதலர்கள் வந்து தங்கும் பூங்கா அழகுமிக்க சோலையாக அமைக்கப் பட்டிருந்தது! அந்த மலர்ச் சோலையில் இளவேனில் காலங்களில் மலரும் மலர்களான நுணவம் (நுணா), கோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம் (வெண்கடம்பு), வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் ஆகிய மலர்களை மலர்விக்கும் மரங்களையும் மலர்க் கொடிகளையும் பயிரிட்டிருந்தனர்.
காதற் கடவுளாகிய மன்மதனுக்கு உரிய பொழுது இளவேனில் என்பதால், காதல் விழாவும் இளவேனில் காலத்திலேயே தொடங்கப் பட்டது!

காமன் கோட்டம்
மன்மதன் கோயில் இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு சோலையில் இருந்தது. அதில், தலைவன் தலைவியர் கூடியிருப்பதற்காக மணவறைகள் இருந்தன. இத்தெய்வத்திற்கு இராசகிரியத்தில் விழா நடறத்தப்பட்டதை பெருங்கதை உரைக்கிறது.
காதலன் வரவுக்காகக் காத்திருந்த பதுமாபதி, உதயணனைக் கண்டு மகிழ்ந்த பின்னர் தன் காதற் தலைவனைக் கண்ட மகிழ்ச்சியில் வேதியர்க்கும் மற்றவக்கும் அவர்கள் வேண்டிய பொருளைத் தானமாக வழங்கினாள் என்பதயும் அறியலாம்.
இளவேனில்
இலக்கியத்தில் காதல் தலைவியர், தங்கள் காதல் தலைவனைக் காதலித்து விரும்பியது போலவே இளவேனிலும் அவர்களைக் காதலால் விரும்புகின்றது என்ற கற்பனை இடம்பெற்றுள்ளது. எவ்வாறென்றால், காதலரைக் கூடிக் களித்து மகிழும் மகளிர், தங்கள் காதல் தலைவனை அணைத்த கை நெகிழ்ந்து விடாமல் பின்னிக் கிடக்கச் செய்வதே இளவேனில் தான் என்பர். தம்மை விரும்பும் நல்லவராகிய காதல் தலைவர்க்கு தாம் நல்லவர் ஆனது போல, காதல் திருவிழாவின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் காதலர்க்கும் இளவேனில் நல்லையே என்று கலித்தொகை பாராட்டுகிறது.
விழா பரம்பல்
இந்திர விழாவைக் காமதேவன் விழா என்றும், வில் விழா என்றும், வேனில் விழா என்றும் கொண்டாடப்பட்ட காதல் திருவிழா, பூம்புகார்ப் பட்டினத்தில் மட்டும் கொண்டாடப் படவில்லை. தமிழ்க் கூடல் நகரமாகிய மதுரை மாநகரிலும் கொண்டாடப்பட்டது மதுரைப் பட்டணத்தில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது]
காதல் திருவிழாவின் போது, பங்குனித் திங்களைப் பனி அரசாளும் என்று கூறப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. புகார் நகரத்தில் திருவிழா நடைபெற்ற அதே நாளில் கூடல் மாநகரமும் விழாக் கோலம் கொண்டிருந்தது என்று அறியப்படுவதனால், காதலர்த் திருவிழா தமிழகம் முழுமைக்கும் பொதுவானது என்றே குறிப்பிட வேண்டும்.
பழங்கதைகளின்படி தன் நகரத்தில் காதல் தெய்வத் திருவிழா கொண்டாட அருள் செய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டினான் சோழன். அவனின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு உடன்பட்டான். அந்நாள் தொடங்கி காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளது.
அச்செய்தியை மணிமேகலை விழாவறை காதை விளங்குகிறது. அவ்விழாவை பற்றிய செய்திகளை, வான்மீகியும் காளிதாசரும் தத்தம் நூல்களில் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர், "மருத நிலத்திற்குத் தெய்வமாக விளங்கும் இந்திரனுக்கு, 'ஆடலும் பாடலும் ஊடலும் உணர்தலும்' உள்ளிட்ட இன்ப விளையாட்டுகள் என்கிறார். ஆகையினால், "இனிதின் நுகரும் இமையோர்க்கும் இன்குரல் எழிலிக்கும் இறைவனாகிய இந்திரனுக்கு விழவு செய்து அவர்களை சோழ மன்னரும் மக்களும் அழைத்தனர்" என வரைவு காண்கின்றார்.
காதல் தேவனை வணங்கும் பெண்கள்
வினையின் காரணமாகவும் போரின் காரணமாகவும் பிரிந்திருக்கும் காதலரை மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும் என விரும்பும் பெண்கள், தங்கள் காதல்தேவனை வணங்கி, "காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும் சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டுகின்றனர்.
'காதலன் தன்னை, தன் கண்ணால் காணுமாறு காணச் செய்யவேண்டும்! அவன், பனை ஈன்ற மடற்குதிரையில் ஏறி விரைந்து வரச் செய்ய வேண்டும், காதலனின் வருகையைப் பெறச் செய்வதற்காகக் காமனின் கால்களைக் கட்டிக் கொண்டு, இரப்பேன் அவனின் அம்புகள் எனக்குக்கிடைக்க அருள் செய்ய வேண்டும்!என்று காமனை இன்று மட்டுமல்ல என்றும் இரப்பேன்' என்று கலித்தொகையில் ஒருத்தி உரைக்கக் காணலாம்
காம தேவன் விழாவில் பூம்புனல் விளையாட்டு
காதலர் திருவிழாவின் போதில் ஆண்கள் தங்கள் காதலியுடனேயிருந்து புனலாடி மகிழ்ந்திருப்பர் என்பது பெறப்படுகிறது. அதுபோது, வினையாற்ற வேற்று நிலம் சென்ற வலவர் மீண்டு வந்து காதலியருடன் கூடியிருப்பர். அந்த நாளை எண்ணியே காதற்பெண்டிர் காத்திருப்பர் என்பது கலித்தொகையால் அறியலாம். தோழியிடம் தலைவி கீழ்க் கண்டவாறு உரைக்கின்றாள்.
'ஒளிரும் இழையினை உடைய தோழி, நீர் கொண்ட காரியம்வெற்றி உண்டாவதாக என்று கூறித் தொழுது நம் காதலரை நாம் விடுத்தக்கால், அவர் நம்மிடத்தேவருதும் என்று உரைத்தக்காலம், நீர் நிறைந்த ஆற்றிடைக் குறையிலே அவர் தம்மை மகிழும் பரத்தையரைக்கூடிக் காமனுக்கு நிகழ்த்துகின்ற விழாவினிடத்தே, அவருடனே விளையாடும் இவ் இளவேனிற் காலமல்லவோ?' என்று காதலன் வரவை எதிர் நோக்கிக் காத்திருப்பது புலனாகிறது]
நம் காதல் இளைஞர்கள், பூம்புனலில் நீராடும் போது இல்லக் கிழத்தியுடன் மட்டுமல்லாது காதல் கிழத்தியுடன் சேர்ந்து புனலாடிக் கொண்டிருந்தனர். காதல் திருவிழா காதலர்க்குப் பெருவிழா என்பது புலப்படும்.
கடற்கோள்
இத்துணைச் சிறப்புகளுடன் கொண்டாடப்பட்ட காதல் தேவனின் திருவிழா நின்றுவிட்டதை அறிந்து கோபம் கொண்ட இந்திரன், சாபம் இடுகின்றான். அதனால், பூம்புகார் துறைமுகப் பட்டினத்தைக் கடல் கொண்டது என்று நாட்டார் பழங்கதைகள் கூறுகின்றன.
கரிகால் வளவனின் மகன் சோழன் நெடுமுடிக் கிள்ளி
கடைச் சங்க காலத்தில் சோழ அரசில் வீற்றிருந்த சோழன்நெடுமுடிக் கிள்ளி, தன் குழந்தையைத் தவற விட்டுவிடுகிறான்! தன் குழந்தையைக் காணாமல் குழந்தையைத்தேடிக் கண்டு பிடிப்பதில் அதிக நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதனாலும், குழந்தையைக் காணவில்லையே என்ற ஏக்கத்தினாலும் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய காமதேவன் விழா நடைபெறவேண்டியதையும் மறந்தான்
தன்னைக் குறித்து எடுக்கப்பெற்ற விழாவானது தடைப்பட்டதால் கோபமுற்ற இந்திரன் சாபமிட்டதால், புகார் நகரைக் கடல் கொண்டது என்று, மேகலாதெய்வம் கூறியதாகவும் அதை, அறவணடிகள் மணிமேகலைக்குக் கூறியதாகச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்.[17] நெடுமுடிக் கிள்ளிக்குப் பின் காதலர் திருவிழா நின்றுவிட்டதாகத் தெரிகிறது. என்றாலும், தமிழகத்தின் தென்பகுதிகளில், குறிப்பாக,சோழமண்டலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காமனுக்குக் கோயில் இருப்பதைக் காணலாம். ஆண்டு தோறும் மாசித் திங்களின் போதில், காமன் விழா சீறோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது. பூம்புகார் பெருநகரப் பட்டினம் கடலால் சூழப்பட்டு கடலுக்கு இரையானாலும் காமதேவனுக்காக எடுக்கப்படும் விழா நின்றுவிடவில்லை.
இன்றைய காதலர் நாள்
பழந்தமிழின் தொன்மையை ஆராய்ந்து கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்களில் ஒருவரான பேராசிரியர் கே. உலகநாதன், தமிழ் மொழியின் தொன்மை வடிவமாகிய சுமேரு இலக்கியத்திலும் இந்திர விழா பற்றிய குறிப்புகள் காணப் படுவதாகக் கூறியுள்ளார். அவரின் குறிப்புகளைக் கொண்டு பார்க்கும் போது, தமிழகம், "உலகில் நடக்கும் காதல் திருவிழா அனைத்திற்கும் மூலமாகவும் முன்னோடியாகவும் விளங்கிற்று" என்று கூறலாம்.
உரோமாபுரியினரால் தொடங்கப்பட்டு நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்ற காதலர் நாள் (VALENTINES DAY) தமிழகத்திலிருந்து சென்றதாகவே இருக்க வேண்டும் வாய்ப்பு உள்ளது. காரணம், உரோமானியர்கள், காமதேவனுக்குத் திருவிழா நடத்திய சோழர்களின் காலத்தில், சோழர் மாளிகையில், மன்னர்க்கு மெய்க்காப்பாளர்களாக, போர் வீரர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர்.  அஃதோடல்லாமல், உரோமானிய ணிகர்கள் தமிழகத்தின் பொருள்களை வாங்கிச் செல்ல மரக்கலங்களில் வந்து சென்றனர் என்பது, காமதேவனுக்காக எடுக்கப்படும் விழாவைக் கண்டிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம்! அதனால், அவர்களிடத்திலும் அப்பழக்கம் தோன்றியிருக்கலாம்.
உரோமாபுரி நாட்டினராகிய யவனரின் மரக்கலங்கள் முசிறித் துறைமுகத்திற்குப் பொன்னைக் கொண்டு வந்து இறக்கி விட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றன. (அகநானூறு. 149: 9-11) யவனர்கள் புகார் நகரத்திற்கு வாணிகத்தின் பொடுட்டு வந்திருந்து தங்கியிருந்திருக்கின்றனர். (சிலப்பதிகாரம். 5:10)
யவனர்கள், வாளைக் கையில் ஏந்திக் கொண்டு மதுரை மாநகர் கோட்டை வாயிலில் காவல் புரிந்து வந்துள்ளனர். (சிலப்பதிகாரம்.14:66-67)
யவனர்களில் சிலர் தமிழ் நாட்டிலேயே தங்கி வாழ்ந்துள்ளனர். புகார் நகரில் தங்கியவர்கள் மாடமாளிகைகளிலும் மதுரையில் தங்கியவர்கள் கோட்டையைக் காவல் காக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர் என்பதால் தமிழகத்தின் தொன்மையான பழக்கவழக்கங்களில் பலவற்றை யவனர்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அவற்றுள் சில பழக்கவழக்கங்கள் யவனர்கள் தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கவும் கூடும். அவ்வாறு கொண்டு சென்றவற்றுள் "காதலர் தின விழா"வும் ஒன்றாக இருந்திருக்கூடும் என்ற கருத்து உள்ளது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

No comments:

Post a Comment