காதல் திருவிழா
பிப்ரவரி மாதம்
வந்தாலே இளசுகளின் மத்தியில் ஒருவித உற்சாகமும், கிளுகிளுப்பும் ஊற்றாகப்
பெருக்கெடுத்து ஓடுவதை அண்மைக்காலங்களில் காணமுடிகிறது. அதற்கு காரணம் பிப்ரவரி 14
காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதேயாகும். இன்றைய காதலர் தினத்தை
வர்த்தக நோக்குடன் லாபம் ஈட்டும் மற்றொரு விழாவாக பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள்
மாற்றி விட்டன. எப்படி இருந்தாலும் காதலர்களுக்கு அன்றைய தினம் குதூகலமாக
மாறிவிட்டதில் ஒருவகையில் சந்தோஷம்தான்.
இன்றைக்கு கொண்டாடப்படும் காதலர் தினம் பல
நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் காதல் திருவிழாவாக கொண்டாடப்பட்டு
வந்துள்ளதை வரலாற்று சான்றுகளும், பாடல்களும், இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன.
அந்த வகையில் பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும், உண்மையான
காதலர்களையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
காதலையும் வீரத்தையும் அகமும் புறமுமாகக் கொண்டாடிய பண்பாடு தமிழர் பண்பாடு.
அத்தகைய தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது காதல் திருவிழா. அறத்தையும்,
மறத்தையும் உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாக காதல் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.
பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
பொதிகை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும் போற்றப்பட்டும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றியவன் தொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான்.
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் கொண்டாடிய அவ்விழாவைப் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள், 'வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன் என்று குறிப்பிடுகின்றார். தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.
மேலும், காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனி மாதம் இருபத்தொன்பதில் சித்திரை நாளில் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு முன், மாசித் திங்கள் சித்திரை நாளில் விழாவிற்கான கால்கொண்டு கொடியெடுத்துள்ளனர் என்பதை அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால் அறியலாம்.
மகளிரும் மைந்தரும் தங்கள் மாடமாளிகையில் இளநிலா முற்றத்தில் அமர்ந்து கொண்டு இளவெயிலை அனுபவிக்கும் காலம் பின்பனிக் காலம்.. அத்தகைய பின்பனிக் காலமே, காதல் திருவிழா நடத்துதற்கு உரிய காலம் எனக் கண்டனர். கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம் காதல் கொண்டாள். அவர்கள் இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆதிமந்தியை காவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தியைத் தேடிய ஆட்டனந்தி, காவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள். அவள் தேடிச் சென்றபோது, காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது என்று ஆதிமந்தி தன் பாடலில் குறிப்பிடுகின்றாள். சிறந்த புகழுக்குரிய சோழ மன்னர்களில் கரிகால் சோழனும் ஒருவன். அவனின் ஆட்சிக்கு உட்பட்ட பூம்புகார் பெருநகரில் வில்விழா நடந்தது என்று ஆதிமந்தி கூறும் கூற்றுக்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை
இந்திர விழாவைக் காமதேவன் விழா என்றும், வில் விழா என்றும், வேனில் விழா என்றும் கொண்டாடப்பட்ட காதல் திருவிழா, பூம்புகார்ப் பட்டினத்தில் மட்டும் கொண்டாடப் படவில்லை. தமிழ்க் கூடல் நகரமாகிய மதுரை மாநகரிலும் கொண்டாடப்பட்டது மதுரைப் பட்டணத்தில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது.
காதல் திருவிழாவின் போது, பங்குனித் திங்களைப் பனி அரசாளும் என்று கூறப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. புகார் நகரத்தில் திருவிழா நடைபெற்ற அதே நாளில் கூடல் மாநகரமும் விழாக் கோலம் கொண்டிருந்தது என்று அறியப்படுவதனால், காதலர்த் திருவிழா தமிழகம் முழுமைக்கும் பொதுவானது என்றே குறிப்பிட வேண்டும்.
பழங்கதைகளின்படி தன் நகரத்தில் காதல் தெய்வத் திருவிழா கொண்டாட அருள் செய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டினான் சோழன். அவனின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு உடன்பட்டான். அந்நாள் தொடங்கி காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. அச்செய்தியை மணிமேகலை விழாவறை காதை விளங்குகிறது.
காதலர் திருவிழாவின் போதில் ஆண்கள் தங்கள் காதலியுடனேயிருந்து புனலாடி மகிழ்ந்திருப்பர் என்பது சங்க இலக்கியம்
கூறும் செய்தியாகும். நம் காதல் இளைஞர்கள், பூம்புனலில் நீராடும் போது இல்லக் கிழத்தியுடன் மட்டுமல்லாது காதல் கிழத்தியுடன் சேர்ந்து புனலாடிக் கொண்டிருந்தனர். காதல் திருவிழா காதலர்க்குப் பெருவிழா என்பது புலப்படும்.
இத்துணைச் சிறப்புகளுடன் கொண்டாடப்பட்ட காதல் தேவனின் திருவிழா நின்றுவிட்டதை அறிந்து கோபம் கொண்ட இந்திரன், சாபம் இடுகின்றான். அதனால், பூம்புகார் துறைமுகப் பட்டினத்தைக் கடல் கொண்டது என்று நாட்டார் பழங்கதைகள் கூறுகின்றன.
கடைச் சங்க காலத்தில் சோழ அரசில் வீற்றிருந்த சோழன்நெடுமுடிக் கிள்ளி, தன் குழந்தையைக் காணாமல் குழந்தையைத்தேடிக் கண்டு பிடிப்பதில் அதிக நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதனாலும், குழந்தையைக் காணவில்லையே என்ற ஏக்கத்தினாலும் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய காமதேவன் விழா நடைபெறவேண்டியதையும் மறந்தான்.
தன்னைக் குறித்து எடுக்கப்பெற்ற விழாவானது தடைப்பட்டதால் கோபமுற்ற இந்திரன் சாபமிட்டதால், புகார் நகரைக் கடல் கொண்டது என்று, மேகலாதெய்வம் கூறியதாகவும் அதை, அறவணடிகள் மணிமேகலைக்குக் கூறியதாகச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார். நெடுமுடிக் கிள்ளிக்குப் பின் காதலர் திருவிழா நின்றுவிட்டதாகத் தெரிகிறது. என்றாலும், தமிழகத்தின் தென்பகுதிகளில், குறிப்பாக,சோழமண்டலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் காமனுக்குக் கோயில் இருப்பதைக் காணலாம். ஆண்டு தோறும் மாசித் திங்களின் போதில், காமன் விழா சீறோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது. பூம்புகார் பெருநகரப் பட்டினம் கடலால் சூழப்பட்டு கடலுக்கு இரையானாலும் காமதேவனுக்காக எடுக்கப்படும் விழா நின்றுவிடவில்லை.
இதிலிருந்து தமிழகம், "உலகில் நடக்கும் காதல் திருவிழா அனைத்திற்கும் மூலமாகவும் முன்னோடியாகவும் விளங்குகிறது என்பதை அறியலாம். அக்காலத்தில் யவனர்களில் சிலர் தமிழ் நாட்டிலேயே தங்கி வாழ்ந்துள்ளனர். புகார் நகரில் தங்கியவர்கள் மாடமாளிகைகளிலும் மதுரையில் தங்கியவர்கள் கோட்டையைக் காவல் காக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர் என்பதால் தமிழகத்தின் தொன்மையான பழக்கவழக்கங்களில் பலவற்றை யவனர்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அவற்றுள் சில பழக்கவழக்கங்கள் யவனர்கள் தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கவும் கூடும். அவ்வாறு கொண்டு சென்றவற்றுள் "காதலர் தின விழா"வும் ஒன்றாக இருந்திருக்கூடும் என்ற கருத்து உள்ளது.
இன்றைய நவீன
யுகத்தில் பிப்ரவரி 14 அன்று மட்டும் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால்
உண்மையான காதலர்களுக்கு ஆண்டு முழுவதும், எல்லா நாட்களும் காதலர் தினம்தான்.
(படங்கள், தகவல் உதவி இணையம்)
No comments:
Post a Comment