Sunday, 6 April 2014

சர்ப சித்தர்!!!


    சித்தம் என்றால் அறிவு. சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு. சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவம், யோகம், சோதிடம், மந்திரம், ரசவாதம் போன்ற அரிய அறிவியலையும், மக்கள் நல்வாழ்வுக்கான கருத்துக்களையும், இறைவனை உணரக்கூடிய வழிமுறைகளையும் தந்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சிறப்பு மிக்க சித்தர்களுள் ஒருவரான சர்ப சித்தர் ஜீவ சமாதியாகி இன்றுவரை மக்களுக்கு அருளி வரும் ஜீவ பீடம் மாங்காடு அருகே பட்டூர் கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ளது.
      முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் இந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. ஆனால் சர்ப சித்தர் சமாதியாகியிருந்த இந்த இடம் மட்டும் அமைதியாக இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியவர்கள் ஆராய்ந்த போது அங்கே மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் தென்பட்டுள்ளது. இங்கே தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார். அந்த கல் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் பூதக்கல் என்றும் தெரியவந்துள்ளது.  அந்த லிங்கத்தின் மீது இடது புறத்தில் பிறை வடிவமும், வலது புறத்தில் சூரியன் வடிவமும், லிங்கத்தின் மத்தியில் யோகச் சக்கரமும்,  பிரணவ மந்திரம் பொறிக்கப்பட்டு உள்ளது பஞ்ச புதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது. இங்கே சமாதியாகியுள்ள சர்ப சித்தர்  காலஹஸ்தியில் இருந்து வந்தவர் என்றும், வடக்கு நோக்கி சமாதி அடைந்து உள்ளார்என்றும் கூறப்படுகிறது. இவரது காலம் அறுதியிட்டு கூறமுடியாத அளவுக்கு மிகவும் பழமையானதாகும். சர்ப சித்தர் ஜீவசமாதியாகி, பூதக்கல் உருவாகி 1200 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆதிகாலத்தில் இந்த பூதக்கல்லைப் பார்த்து மக்கள் அச்சமுற்று அப்பகுதி வழியே செல்வதை தவிர்த்துள்ளனர். இதனால் அப்பகுதி புதர் மண்டி காடு போல மாறி, பூதக்கல்லைச் சுற்றி புற்று உருவாகியிருந்துள்ளது. அதன் அருகே செல்பவர்களுக்கு சர்ப்பங்கள்(பாம்புகள்) சீறும் ஓசை கேட்கவே பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர். காலப்போக்கில் அப்பகுதியில் பூதக்கல் இருப்பதையே மக்கள் மறந்து விட்ட நிலையில் கடந்த 16 ஆண்டுகளுக்குமுன் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி.ரவிச்சந்திரன் அவர்களின் கனவில் வந்த சர்ப சித்தர், அசரரீயாக சில தகவல்களைக் கூறி, தான் ஜீவ சமாதி அடைந்துள்ள இடத்தையும், அடையாளத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சித்தர் அடிகளார் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் இடையே சித்தரின் அருளால் ஜீவசமாதி அமைந்திருக்கும் பகுதியை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து வழிபட்டு வரலானார். பின்னர் படிப்படியாக சர்ப சித்தருக்கு கோவிலும் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜையும், மகா சிவராத்திரி தினத்தன்று ஆறு கால பூஜையும், பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பரிகார பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இதில் மகாசிவராத்திரி அன்று நிறைவு பூஜையின் போது, பக்தர்களே நேரடியாக தங்களின் திருக்கரங்களால் சர்ப சித்தர் உறைந்திருக்கும் ஜீவ பீடமான பூதக்கல்லிற்கு அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியைப் பெற்றுச் செல்கின்றனர். இது வேறெங்கும் இல்லாத, யாருக்கும் கிட்டாத கொடுப்பினை என்றால் அது மிகையில்லை.
      இயற்கை சீற்றங்களைக் கட்டுப்படுத்தவும், சகல கிரக பீடை விலகவும், கல்வி, குழந்தைப் பேறு, திருமணம் கைகூட, சர்ப (நாக) தோஷம் விலக,  நோய் குணமடைதல், திருஷ்டி, பித்ருக்கள் சாபம், சித்தர்கள், முனிவர்கள் சாபம் நீங்கவும், குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவி பிணக்கு நீங்கி நல்வாழ்வு வாழவும் இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலனளிப்பதாக இங்கு வந்து பயனடைந்த பக்தர்கள் கூறுவதை நாம் கேட்கலாம். பல்வேறு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய அதிகாரிகள், திரை நட்சத்திரங்கள் இங்கு வந்து வேண்டி, அவர்களின் பிரார்த்தனை பலித்துள்ளதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். நேரில் சென்று தரிசிப்பவர்களுக்கு அது உண்மைதான் என உணரமுடிகிறது. நல்ல ஆன்மிக அதிர்வுகளை உணரலாம்.
சர்ப சித்தர் குடிகொண்டுள்ள பூதக்கல் பல்வேறு சூட்சும ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ந்து இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அந்த ரகசிய சூட்சும அனுபவங்கள் கிடைத்துள்ளன. குரு கடாட்சம் பெற்றவர்களுக்கும், இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் சதா தவ நிலையில் இருக்கும் சர்ப சித்தரின் சகல அனுக்கிரகமும், தெய்வீக அனுபவங்களும் கிடைத்துள்ளன.
யாரிடமும் நன்கொடை, யாசகம் பெறாமல் சித்தரின் அருளாசியுடன் சர்ப சித்தர் ஜீவ பீடத்தை பராமரித்து, பூஜைகளும், நிகழ்ச்சிகளும், விழாக்களும், பவுர்ணமி அன்று அன்னதானமும் வழங்கி, இறைப்பணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன்.
இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், மன அமைதி பெறவும், பிரச்சனைகள் தீரவும், நல்ல அதிர்வுகள் மூலம் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் சர்ப சித்தர். ஆன்ம பலத்தை  அளிக்கவல்ல அதிர்வலைகள் நிரம்பிய சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தை தரிசனம் செய்து சித்தர்களின் அருளாசியை பெறுங்கள்.


தொடர்புக்கு: சித்தர் அடிகளார் திரு.ஜி.டி.ரவிச்சந்திரன், சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், கோவிந்தராஜ் நகர், மாங்காடு. கைப்பேசி எண்.9789826263.

Saturday, 5 April 2014

கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செயலாம்!!!

         பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.
சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மாவிற்கு...
மைதா - 1 1/2 கப்
முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோட்டிங்கிற்கு...
பிரட் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்இதுப் சிக்கன் ரெடி!!போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி!

Monday, 31 March 2014

வீரபாண்டிய கட்டபொம்மன் சில தகவல்கள்


1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார்

இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலை
கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.

அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது .

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.

அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.
கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.

இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.

கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது .

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார்.

போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார் . ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.
நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன்
இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது. தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம். கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர் .

தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

'Divide and Rule'
என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?