Monday, 21 September 2015

மொட்டைப் பிள்ளையார்!!!

மூலவர் செல்வ விநாயகர்

மொட்டைப் பிள்ளையார்

நமது பாரத நாட்டில் பண்பாடு, கலாச்சாரம், சமூக அமைப்பு, மக்கள் வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக அமையப் பெற்றவை இந்துக் கோவில்கள். பெரும்பாலான கோவில்கள் கலாச்சார அடையாளங்களாகவும், பண்பாட்டு புகலிடமாகவும் விளங்குபவை. அப்படிப்பட்ட கோவில்கள் பல அந்நியர்களான மொகலாயர்கள், ஆங்கிலேயர்களின் படையெடுப்பின் போது சேதப்படுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளன. 
   இதன் மூலம் நமது தொன்மையும், வரலாறும் அழிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் மீறி பல கோவில்கள் இன்னமும் உயிர்ப்புடன் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், தொன்மையையும், வரலாற்றையும், மக்களின் வாழ்க்கையையும், இறையுணர்வையும் உலகத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
மொட்டைப் பிள்ளையாருடன் செல்வ விநாயகர்

மொட்டைப் பிள்ளையார் கோவில்

நாகர்

அந்த வகையில் அந்நியர்களின் படையெடுப்பின் போது தாக்குதலுக்கு ஆளாகி, சேதமுற்ற விநாயகர் கோவில் சென்னை அனகாபுத்தூரில் இன்றும் உள்ளது. மொட்டைப் பிள்ளையார் அல்லது செல்வ விநாயகர் கோவில் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. அனகாபுத்தூர், கன்னியம்மன் கோவில் தெரு, தண்டுக்கரை பகுதியில் இராமலிங்க சுவாமி மடத்தின் அருகே(இந்த மடத்தில் உள்ள குகையில் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.) மொட்டைப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள சிறு குன்றின் மீது பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்த கோவிலில் விநாயகர் அருள்பாலித்து வந்தார். 
மூஞ்சூறுவுடன் மொட்டை பிள்ளையார்
  ஆங்கிலேய படையெடுப்பின் போது இந்தக் கோவில் தகர்க்கப்பட்டதாகவும், அப்போது மூலவராக இருந்த விநாயகர் சிலை தலையின் ஒரு பகுதி உடைக்கப்பட்டதாகவும், அப்போதிருந்து இந்த விநாயகர் மொட்டைப் பிள்ளையார் என்று அழைக்கப்படுவதாகவும், இந்தக் கோவிலை தற்போது நிர்வகித்து வரும் திருமதி. பத்மா தெரிவித்தார். இவரது கணவர் கிருஷ்ணகுமாரின் தந்தை வீரபத்திர செட்டியார் என்பவர் இதற்கு முன்பு நிர்வகித்து வந்ததாகவும், அவருக்குப் பிறகு, தற்போது இந்த தம்பதியினர் கோவிலை பராமரித்து நிர்வகித்து வருகின்றனர். சிற்ப சாஸ்திரப் படி உடைந்த அல்லது குறைபாடுள்ள சிலை வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்பதால் புதிதாக விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 
 கேட்டவருக்கு கேட்ட வரும் அருளும் வண்ணம் செல்வ விநாயகர் என்று பெயர் சூட்டப்பட்டு அப்பகுதி மக்களின் வறுமை நீக்கி வளமை சேர்க்கும் விதமாக அருள்பாலித்து வருகிறார் செல்வ விநாயகர். மூலவரான செல்வ விநாயகருக்கு அருகிலேயே மொட்டைப் பிள்ளையாரும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 
இராமலிங்க மடம் ஜோதி
இராமலிங்க மடத்தில் பக்தர்கள்

இராமலிங்க மடம் 
இக்கோவிலுக்கு வந்து வேண்டுதல் நிறைவேறி தாங்கள் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுவதை நாமே கேட்கலாம். அப்படி வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களின் அன்புள்ளத்தாலும், கொடைத் தன்மையாலும் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 
  இத்தகைய சிறப்பும், பழைமையும், தொன்மையான வரலாறும் கொண்ட இந்த மொட்டைப் பிள்ளையார் கோவிலை சீரமைக்கவும், பக்தர்களுக்கு மேலும் பல வசதிகள் செய்து தரவும், பராமரிக்கவும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி, கோவிலுக்கு சுற்றுச் சுவர் கட்டவும், தரை அமைக்கவும், தண்ணீருக்காக போர்வெல் வசதி அமைத்து தரவும், மேலும் சில வசதிகளை செய்து மேம்படுத்த, பக்தர்கள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். வரலாற்றோடு நீண்ட தொடர்புடைய மொட்டைப் பிள்ளையார் கோவிலை பாதுகாக்க வேண்டியது பக்தர்களின் கடமை. இதற்காக கோவில் நிர்வாகம் பக்தர்களிடமிருந்து உதவியையும், சேவையையும் வேண்டுகின்றனர். விருப்பமுள்ளவர்கள் நிதியாகவோ, பொருளாகவோ, சேவையாகவோ வழங்கி, மொட்டைப் பிள்ளையார் கோவிலுக்கு உதவி செய்து, விநாயகரின் அருள்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
உதவி செய்ய அழைக்கவும்:
ஓம் சிவசக்தி ஆன்மிக பக்த சபை
தலைவர் : திருமதி. சுசிலா
பொதுச் செயலாளர் : திரு. ஐயப்பன்
கோவில் நிர்வாகி : திருமதி. பத்மா
செல் : 9677211371, 7401255908

கொசுறு செய்தி:
அனகாபுத்தூர்.
   சென்னை பல்லாவரம் அருகே உள்ள இதன் தொன்மையான பெயர் ஆனைகா புத்தூர் ஆகும். அதாவது யானைகளை பராமரித்து பாதுகாத்து வந்த இடமாகும். பல்லவர்களின் காலத்தில் இந்த இடத்தில் யானைகள் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும், இவ்வூரின் அருகே அடையாறும், அதனை சார்ந்த மடுவும் யானைகளை பாதுகாக்க உகந்ததாய் இருந்துள்ளது. அதனால் யானைப்படை இங்கு நிறுத்தி பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
     மேலும், இவ்வூரில் பாதுகாக்கப்பட்டு வந்த சில யானைகள் அருகிலுள்ள மடுவின் நீரை முகந்து அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்தும், மடுவின் கரையில் அமைந்த நந்தவன மலர்களை தூவியும் அர்ச்சித்து பெயர் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. எனவே, யானை பூஜித்த தலைவன் இறைவன் உறையும் இவ்வூர் ஆனைகாபுத்தூர் என்று அழைக்கப்பட்டு, தற்காலத்தில் அனகாபுத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment