Sunday, 28 September 2014

மன்னன் அதிகமான வரியை மக்கள் மீது சுமத்துவது என்பது மக்களிடம் பிச்சையெடுப்பதற்கு இணையானது!

     
 
      வழிவழியாக வந்த அரசபதவி ஏற்ற மன்னன் அதிகமான வரியை மக்கள் மீது சுமத்துவது என்பது மக்களிடம் பிச்சையெடுப்பதற்கு இணையானது!
அத்தகைய சிறப்பில்லாத ஆட்சியைச் சிறுமையோன் பெறின் அதில் பெருமையில்லை. 
      துணிந்து போரிடும் வலிமையும் முயற்சியும் உடையவன் பெறுவானேயானால் தாழ்ந்த நீரையுடைய வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெண்ணிற நெட்டி கோடையில் உலர்ந்து சுள்ளி போல் மிகவும் நொய்மையுடையதாம். குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்கொற்றக்குடையையும் முரசையும் உடைய அரசரது ஆட்சியைப் பொருந்திய செல்வம் அதுவே. என்கிறது இப்புறப்பாடல்.
பாடல் இதோ..

மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்
பாறர வந்த பழவிறற் றாயம்
எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக்
குடிபுர விரக்குங் கூரி லாண்மைச்
5
சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே
மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள்
விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர்
அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
10
நொய்தா லம்ம தானே மையற்று
விசும்புற வோங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே. (75)
புறநானூறு 
75.
சோழன் நலங்கிள்ளி
திணை: அது. துறை: பொதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளி 
பாட்டு.


பாடல் வழியே..

மகிழச்சி நிறைந்த மக்களைக் கொண்டதாக ஒருநாடு இருக்கவேண்டுமென்றால் வரிச்சுமையிருக்கக்கூடாது என்ற கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.

மக்களிடம் அதிகமாக வரியை வசூலிப்பது என்பது பிச்சையெடுப்பதற்கு இணையானது என்ற கருத்து சுட்டப்பட்டுள்ளது.

( சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியிடமிருந்து 
உறையூரைத் தான் பெற்றுத் தான் அங்கே இருந்து அரசு புரிந்து வந்தான். 
வருகையில், ஒரு நாள் சான்றோர் சூழ விருக்கையில், அரசு முறையின் 
இயல்புபற்றிப் பேச்சுண்டாயிற்று
மலர்தலை யுலகம் மன்னனை உயிராகக் 
கொண்டிருத்தலை யுணர்ந்து அதற் கூறுண்டாகா வண்ணம் காத்தற்கண் 
வரும் இடுக்கண் பலவற்றையும் நோக்க, அரசு முறை யென்பது எளிதன்று 
என்பவர் பலராயினர். அக்காலை நலங்கிள்ளி, “அரசு முறை மூத்தோர்க்குப் 
பின் அவர் வழிவரும் இளையோர் பால் முறைப்படி வரும் தாயமுறையினை 
யுடைத்து. அதனை யெய்தினோன் இவ்வுலகிற் பெருஞ் சிறப்பெய்தி 
விட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிகளை யிரந்து 
பொருளீட்டக் கருதினானாயின், அவற்கு அரசுமுறை பொறுத்தற் கரிய 
சுமையாய்ச் சிறப்புடைத்தன்றாம்; வலியுடைய விழுமியோன் பெறுகுவனாயின், 
அவற்கு உலர்ந்த நெட்டித் தக்கை போல நொய்தாம்என்றான். இங்ஙனம் 
சீரிய கருத்தமைந்த சொல்லை அவன் இப் பாட்டு வடிவில் தந்துள்ளான்.) 
        சோழன் நலங்கிள்ளி என்னும் அரசனே அரசின் கடமை பற்றி இவ்வாறு கூறியிருப்பது இன்றைய நிலையிலும் நிகழ்காலச் சமூக நிலையை ஒப்பிட்டு சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

No comments:

Post a Comment