Tuesday, 19 August 2014

இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா!!!

இறோம் சானு சர்மிளா அல்லது இரோம் ஷர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர்மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபிஎன அழைக்கின்றனர். இவர் நவம்பர் 2, 2000ஆம் நாளிலிருந்து மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகிறார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்.
 உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு
        நவம்பர் 2, 2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பத்து குடிமக்கள் சுடப்பட்டு இறந்தனர்.  இந்த நிகழ்வு பின்னாளில் "மலோம் படுகொலை" என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படுகின்றது  1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணி லெய்சங்பம் இபெடோமி உட்பட கொலையுண்டவர்களின் படங்களை உள்ளூர் நாளேடுகள் விவரமாக பதிப்பித்திருந்தன.
நான்காம் நிலை கால்நடை ஊழியரொருவரின் மகளான 28 வயது சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு மற்றும் நீர் உண்ணாப் போராட்டத்தை மேற்கொண்டார். அவரது உடன்பிறப்பு இறோம் சிங்கஜித் சிங்கின் கூற்றுப்படி "சிறுவயது முதலே வியாழக்கிழமைகளில் உண்ணாதிருக்கும் விரதத்தை கடைபிடிக்கும் சர்மிளா கொலை நிகழ்ந்த நாள் வியாழக்கிழமையாக அமைந்திருந்த காரணத்தால் தனது உண்ணாநிலையை அப்படியே தொடர்ந்தார்". அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கிய நாள் நவம்பர் 4 என்றும் அதற்கு முந்தைய நாள் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கி அனுமதி பெற்றதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. போராளி என ஐயுறும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாகும்.  சித்திரவதை, வலிய காணாமல் போவது, நீதித்துறைசாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்த சட்டமே காரணமாக மனித உரிமை தன்னார்வலர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.
        உண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய மூன்றாம் நாளே சர்மிளா தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார்.  அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், காவல்துறையினர் அவருக்கு வலுக்கட்டாயமாக,மூக்கு குழாய் வழியே உணவு வழங்கத் துவங்கினர். இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து இறோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment