Friday, 17 July 2015

ஈகைத் திருநாள்!!!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
நோன்பு பெருநாள் என்றால் என்ன?

ஓர் உண்மையைச் சொன்னால் உங்கள் விழிப் புருவங்கள் வில்லாய் வளையும்...!இஸ்லாமியர்களுக்கான இனிய பண்டிகைகள்-இனிய திருவிழாக் கள் மொத்தம் எத்தனை தெரியுமா?இரண்டே இரண்டுதான்.வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை! ஒன்று, ரம்ஜான் பண்டிகை என்று சொல்லப்படும் ஈகைத் திருநாள். இன்னொன்று, ஹஜ்ஜுப் பெருநாள் என்று சொல்லப்படும் தியாகத் திருநாள்.இந்த இரண்டைத் தவிர, வேறு எந்த ஒரு பண்டிகையோ, திருவிழாவோ இஸ்லாமியர்களுக்கு இல்லை.


அப்படியானால் முஹர்ரம், பஞ்சா, உரூஸ். சந்தனக்கூடு என்பதெல்லாம்...?

அவையெல்லாம் பண்டிகையும் அல்ல; திருவிழாவும் அல்ல. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்கள் அவை.அவ்வளவு ஏன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாது நபி கூட, இஸ்லாமியப் பண்டிகை அல்ல.உலக முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து, அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா...!அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?அதைச் சொன்னால் நீங்கள் இன்னும் வியப்படைவீர்கள்.பிறர் கண்ணீர் துடைப்பதையும், பிறர்க்கு உதவுவதையும் மதக் கடமையாகவே - இறை வழிபாடாகவே ஆக்கியுள்ள மார்க்கம் தான் இஸ்லாம்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ""இறைத் தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்ன?'' என்று வினவினார்.இந்த வினாவிற்கு இறைத் தூதர் என்ன விடை சொல்லி இருப் பார் என்று நினைக்கிறீர்கள்?

இறைவன் மீது நம்பிக்கை கொள்ளல் எனத் தொடங்கி இஸ்லாத்தின் அடிப்படைகளை எல்லாம் விலாவாரியாக விளக்கியிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்?அதுதான் இல்லை.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரே வார்த்தையில் விடை அளித்தார்கள்."பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்!'"அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர், இறை நம்பிக்கையாளர் அல்லர்' என்று அண்ணலார் ஓங்கி முழங்கினார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டதன் நோக்கம், மக்களின் உளப் பிணியைத் தீர்ப்பது மட்டுமல்ல, பசிப் பிணியைத் தீர்ப்பதும் தான்.அவருடைய அனைத்து அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும், இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்பதை வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.இதே வழிகாட்டுதல் தான் ரமலான் மாதத்திலும் பளிச்சிடுகிறது."ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்தேனும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்'"ஒரு மிடறு பாலைக் கொண்டாவது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுங்கள்'"இறை வழியில் தான தர்மங்களை வாரி வழங்குங்கள்'"வசதியுள்ளவர்கள் தங்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தைக் கணக்கிட்டு ஏழைகளுக்குக் கொடுத்தே ஆக வேண்டும்'-

இவை போன்ற எண்ணற்ற கட்டளைகள், நபிமொழி நூல்களில் நிரம்பி வழிகின்றன.பெருமானார்(ஸல்) அவர்களின் அதே கட்டளை தான், ஈகைத் திருநாளிலும் செயல் வடிவம் பெறுகிறது.எப்படி?பெருநாளன்று, யாரும் பசி- பட்டினியோடு இருக்கக் கூடாது என்று, இஸ்லாம் விதித்துள்ளது.அந்த மகிழ்ச்சியான நாளில், யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என்று அண்ணலார் கட்டளை இட்டுள்ளார்கள்.எல்லாம் சரி, ஆனால் கஞ்சிக்கே வழியில்லாத, கதியற்ற மக்களுக்கு ஏது பெருநாளும், திருநாளும்? அரிசிச் சோற்றுக்கு அவர்கள் எங்கே போவர்?இங்கு தான் இஸ்லாமியச் சட்டம் மிக அருமையாகச் செயல்படுகிறது.பணக்காரர்கள் மட்டுமல்ல, ஓரளவு வசதியுள்ள நடுத்தர மக்கள் கூட, பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குப் போவதற்கு முன்பாக "ஃபித்ரா' எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் தர வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.

நாம் சாப்பிடுவதற்கு என்ன அரிசியைப் பயன்படுத்துகிறோமோ, அதே தரத்தில், ஏறத்தாழ இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதன் கிரயத்தை, ஏழைகளுக்கு, பெருநாள் தர்மமாக வழங்கிட வேண்டும்.உங்கள் குடும்பத்தில் ஆறு பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆறு பேருக்கும் தலா இரண்டரை கிலோ அரிசி எனக் கணக்கிட்டு 15 கிலோ அரிசியை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்."ஃபித்ரா எனும் இந்தப் பெருநாள் தர்மத்தை யார் வழங்கவில்லையோ, அவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

பூமிக்கும், வானத்துக்கும் இடையே அது தொங்கிக் கொண்டிருக்கும்' என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம், பெருநாளன்று எந்த ஓர் ஏழையும் பசியோடு இருக்கக் கூடாது; உணவின்றி வாடக் கூடாது; பிஞ்சுக் குழந்தைகள், பட்டினியால் தவிக்கக் கூடாது ன்பதேயாகும்.அதனால்தான் இந்தப் பண்டிகைக்கு ஈதுல் ஃபித்ரு- ஈகைத் திருநாள் என்று பெயர் வந்தது.ஆம்...!ஈகைத் திருநாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்...!பசிப்பிணி போக்கும் பெருநாள்...!வாசகர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்... !ஈத் முபாரக்!

நன்றி..
-
சிராஜூல் ஹசன் , ஆசிரியர் சமரசம்




Tuesday, 16 June 2015

சித்தர் ஜீவசமாதி திருப்பணியில் பங்கேற்க வாருங்கள்…




  கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, வழிகாட்டிகளாக, குருவாக, மக்களோடு மக்களாக வாழ்ந்து, உருவமாகவும், அரூபமாகவும் இருந்து உலக உயிர்களை காத்து வருபவர்கள் சித்தர்கள். அட்டமா சித்திகள் மூலம் மக்களுக்கு எண்ணற்ற நற்பயன்களை வழங்கி, இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களுள் ஒருவரான மாங்காட்டில் ஜீவசமாதியான சர்ப சித்தர், நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி, கேட்டவரம் தந்து அருளி வருகிறார்.

  சர்ப தோஷம், பித்ரு தோஷம், திருமணத்தடை, உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தீர சர்ப சித்தரை வழிபட்டு வர பிரச்சனைகள் அகலும். இது அங்கு வந்து பலனடைந்த பக்தர்கள் கூறும் உண்மை. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த சர்ப சித்தரின் ஜூவ சமாதியான “சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்” சென்னை மாங்காடு அருகே பட்டூர் கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ளது.


























   சர்ப சித்தர் குடி கொண்டுள்ள அதிஷ்டானம் எனப்படும் கோவிலின் மீது மூன்று நிலை கோபுரம், தியான மண்டபம், சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாதி வேலைக்கு மேல் முடிவடைந்துள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியால் ஆலய திருப்பணிகளைத் தொடருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

  அருளுள்ளம் படைத்த அடியார்கள், சிவ பக்தர்கள், சித்தரடியார்கள் உதவியுடன் இதுவரை இந்தப் பணி சாத்தியமாயிற்று. தொடர்ந்து கட்டுமானப் பணிகளை நிறைவு செய்திட பொருளாகவோ, நிதியாகவோ உதவி செய்திட கேட்டுக் கொள்கிறோம்.





  கோவில் திருப்பணியில் பங்கு பெற்று ஐயா சர்ப சித்தரின் அருள் பெற அழைக்கின்றோம். 

    இப்படிக்கு, சித்தர் அடிகளார் சிவஸ்ரீ ஜி.டி. ரவிச்சந்திரன்.

ஓம் ஸ்ரீசர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்,  கோவிந்தராஜ் நகர், மாங்காடு, சென்னை. தொலைபேசி எண். 9789826263 .


Thursday, 21 May 2015

chutti aishwarya - kanchana 2 junior

Blind student 10th state level 2nd rank

பார்வையற்ற மாணவி சாதனை!!!



பார்வையற்ற மாணவி சாதனை!!!
10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்த என் சகோதரி மகள் மணிமேகலை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை வெளியிடப்பட்டன. இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளில்  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பள்ளியைச் சேர்ந்த மணிமேகலை 474 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். திருத்தங்கல்லில் வசிக்கும் எனது சகோதரி மகாலட்சுமியின் மகள் மணிமேகலை. இவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-97, ஆங்கிலம்-90, கணிதம்-92, அறிவியல்-98, சமூகஅறிவியல்-97. தனது வெற்றிக்கு பாடுபட்ட பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர், தலைமையாசிரியர், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் மணிமேகலை, இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் சாதனைகள் படைத்து வாழ்வில் உயர்நிலை அடைய மனமார பாராட்டி வாழ்த்துகிறோம். இவர் மேலும் பல சாதனைகளை படைக்க அனைவரும் வாழ்த்துங்கள். வாழ்த்துகளுக்கும், உதவி செய்வதற்கும் தொடர்பு கொள்ள: 8682071116.

வாழ்த்தும் நெஞ்சங்கள்: அ. மாரீஸ்வரன், மா.சுசிலா, மா.சு.யோகேஷ், மா.சு.ஐஸ்வர்யா.


Thursday, 16 April 2015

அநாதைச் சிவன்!





      ஒரு அந்தி சாயும் நேரம். நண்பர் கார்த்திக்குடன் காஞ்சிபுரம் சென்று விட்டு திரும்பும் போது, அந்தக் கோவில் பற்றி அவர் சொல்ல, இருவரும் அங்கு சென்றோம். அந்தக் காட்சியைக் கண்டவர்களுக்கு கண்ணில் ரத்தம்தான் வரும். ஆம். சுமார் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் எனக் கூறுகின்றனர். 
        ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு  அருகே உள்ள பென்னலூர் என்ற சிறு கிராமத்தில் ஒதுக்குப் புறமாக, உலகுக்கே படியளக்கும் சிவன் அநாதை போல, கேட்க நாதியற்றவனாய் ஏகாந்தமாய் யாருமற்று கிடக்கிறான். மிகப் பிரம்மாண்டமாக அந்தக் கோவில் இருந்திருக்க வேண்டும் என்பதை அங்கு சிதைந்து கிடக்கும் கட்டட அமைப்பு மூலம் தெரிகிறது. ஏராளமான கல்வெட்டுகள் சிதைந்து கிடக்கின்றன. ஏராளமான சிற்பங்கள் அங்ககீனமாய் சிதிலமடைந்து கிடக்கின்றன. கருவறை வெளிப்புற அமைப்பில் 108 பூதகனங்கள் வெவ்வேறு விதமான தோற்றத்தில் ஆனால் அச்சில் வார்த்ததைப் போல.... அடடா... அந்தச் சிற்பிகள் கடவுளுக்கு நிகரானவர்கள். கோவில் உள்புறம், வெளிப்புறம் எல்லாப் பகுதிகளிலும் ஒரு சிற்பத் தொகுதியே அங்கிருந்திருக்க வேண்டும் என்பதைப் போல சிதைந்த நிலையில் காணப்படுகிறது. 







        மூலவருக்கு நேர் எதிரே உள்ள நந்தி சிலையும் வித்தியாசமாக இருக்கிறது. சற்றே கழுத்தை திருப்பியவாறு அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நந்தியின் முகம் சிதைக்கப்பட்டு காணப்படுகிறது. சிவன் சந்நிதியைச் சுற்றிலும் மேலும் பல சந்நிதிகள் இடிந்த நிலையில் பாழடைந்து கிடக்கிறது. ஏராளமான கல்வெட்டுகள் ஆங்காங்கே சிதைந்து கிடக்கின்றன. கோவிலுக்கு அருகே மிகப் பெரிய அளவிலான இரு குளங்களும் காணப்படுகின்றன. முன்பு புதர் மண்டி, கோவில் இருந்த சுவடே தெரியாமல் இருந்துள்ளது. சமீபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து புதரை அகற்றி சுத்தப்படுத்தி வைத்துள்ளார். விஷேச நாட்களில் பூஜைக்கு ஏற்படாடு செய்திருப்பார்கள் எனத் தெரிகிறது. மற்றபடி, ஆள் அரவமற்ற மயான அமைதியுடன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நடப்பவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது போல சிவன் அங்கு மௌனமாக அமர்ந்திருக்கிறார். ஒரு நோஞ்சான் நாய் மட்டும் கருவறைக்குள் அடைக்கலம் புகுந்தது போல படுத்துக் கிடந்தது. நாம் சென்ற போது ஏறெடுத்து பார்த்ததுடன் சரி. மறுபடியும் அது கவிழ்ந்து படுத்துக் கொண்டது. 















      வவ்வால்களும், கவுளிப் பல்லிகளும், புறாக்களும் மட்டுமே அங்கே நித்திய வாசம் செய்து வருவதைக் காண முடிந்தது. மாற்று மதங்களைச் சார்ந்த சில போக்கிரிப் பொறுக்கிகள் அங்கிருக்கும் உடைந்த சிலைகளை தூக்கிப் போட்டு மேலும் உடைத்துச் சிதைப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர். இந்த மக்களின் அலட்சியம், அற்புதமான ஒரு சிற்பக் குவியலை மட்டும் புறக்கணிக்கவில்லை, இறைவனையும் சேர்த்துத்தான். 



      எது எதற்கோ கொடி பிடித்து கோஷமிட்டு விளம்பரத்துக்காக போராட்டம் நடத்தும் புண்ணியவான்கள் இது போன்று சிதைந்து கிடக்கும் அற்புதங்களை, இந்த நாட்டின் கலையை, பண்பாட்டினை, கலாசாரத்தை, பொக்கிஷங்களை காப்பாற்ற ஏதாவது செய்வார்களா..?
    நேரில் போய் பாருங்கள்... இதற்குமேல் சொல்லத் தெரியவில்லை... 

   - சுசிலா மாரீஸ்வரன்.
படங்கள் உதவி கார்த்திக்.